visaranai-review

கதை 

பார்க்கில் படுத்துறங்கி, பக்கத்து கிராமத்தில் வேலை பார்த்து வரும் தினேஷை போலீஸ் அள்ளிக் கொண்டு போகிறது. கூடவே அவருடன் பார்க்கில் தஞ்சமான மேலும் மூன்று பசங்களும் ஸ்டேஷனுக்கு அள்ளி வரப்பட, பிரித்து மேய்கிறார்கள் நால்வரையும். ‘ஒத்துக்கோ ஒத்துக்கோ…’ என்று அடிக்கும் அவர்களிடம், ‘எதை ஒத்துக்கணும்?’ என்பதை கூட அறிந்து கொள்ள முடியாத அந்த அப்பாவிகளுக்கு அப்புறம்தான் தெரிகிறது, நமக்கு திருட்டுப்பட்டம் கட்டப் போகிறார்கள் என்பது. இறுதிவரை “நாங்க தப்பு செய்யல. ஏன் செய்யாத தப்பை ஒத்துக்கணும்” என்று பிடிவாதம் பிடிக்கும் அவர்கள், கந்தலாக கிழிந்து காகிதமாக நைந்து போன பின் நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுகிறார்கள். விட்டாலும் விதி துரத்துமல்லவா? தங்கள் விடுதலைக்கு, போகிற போக்கில் உதவிய வேறொரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உதவப்போக, அதற்கப்புறம் அவர்கள் அனுபவிக்கும் அடிஷனல் அவஸ்தைதான் மீதிப்படம்! படம் ஆரம்பித்து முடியும் வரை, ஒரு இனம் பிரியாத பீதி தலைக்குள் இறங்கி, நெஞ்சுமேல் நடந்து, வயிற்றுக்குள் விரவி, அப்படியே கால்கள் வழியாக மெல்ல மெல்ல இறங்குகிறது. படத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருத்தரும் மிரட்டிபுட்டாய்ங்களே…!

விமர்சனம் 

ஒரு லாக்கப், அதற்குள் ஆடு போல அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள். லாக்கப் கொடூரங்கள். அந்த முதல் பாதியை பார்க்கிற எவரும், போலீஸ் ஸ்டேஷன் அமைந்திருக்கும் தெருவழியாக கூட செல்ல மாட்டார்கள். அதுவும் தினேஷ் வாங்குகிற அடி, அப்படியே நிஜம். விழுகிற ஒவ்வொரு லத்தி அடிக்கும் அந்த தோலும், சதையும் எம்பி எம்பி அடங்குகின்றன. இவர் வைக்கிற காலடி ஸ்டெப்ஸ்சில் கூட, அவ்வளவு பாந்தமான நடிப்பு. ஹாட்ஸ் ஆஃப் தினேஷ்! “யோவ்… அப்படியே திரும்பி நில்லு. சாயங்காலம் வரைக்கும் இப்படியே நிக்கணும்” என்று நீதிபதி சொல்கிற காட்சி, அவ்வளவு நேர அராஜகத்தின் மீதும் தடவப்பட்ட கருணை ஆயின்ட்மென்ட். தினேஷூடன் நடித்திருக்கும் முருகதாஸ் மற்றும் இரு இளைஞர்களுக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.

பிற்பாதியில் கதை அப்படியே ஜம்ப் ஆகி, இன்னொரு பரபரப்புக்குள் நுழைந்து கொள்கிறது. இது தமிழ்நாட்டு எல்லை. அதே போலீஸ் ஸ்டேஷன். அதே தினேஷ் அண்டு நண்பர்கள் குழு. ஆனால் தெலுங்குக் காரனாவது உசிரோட விட்டான். இவனுங்க? என்ற கேள்வியை எழுப்பி, கிறுகிறுப்பாக ஒரு வணக்கத்தை போட்டு படத்தை முடிக்கிறார் வெற்றிமாறன். நாடு முழுக்க ஒரே காக்கிதான். ஆள்தான் வேறுவேறு…

வசனங்களில் ஊசியை தடவிக் கொண்டு எழுதியிருப்பார் போலிருக்கிறது. தனி அட்ராக்ஷன் பெறுகிற வசனங்கள் ஒவ்வொன்றும். “கோட்டாவுல உள்ள வந்துட்டு சிஸ்டம் புரியாம பேசாதே…” என்று ஏ.சி, சமுத்திரக்கனியை அடக்குகிற அந்த காட்சியும் வசனமும், போலீஸ் அரசியலுக்கும் அதற்குள் உலவும் ஜாதி அரசியலுக்கும் ஒரு சின்ன உதாரணம்.

ரிசல்ட் :

ஒரு பக்கம் அப்பாவிகளை அடித்து உதைக்கும் போலீஸ், தேவைபட்டால், பதவியில் இருப்பவர்களுக்காக, சமூகத்தில் அந்தஸ்த்தில் உள்ளவர்களையும் தூக்கி போட்டு மிதிக்கும். என்பதையும் ஆடிட்டராக வரும் கிஷோர் கேரக்டரின் மூலம் காட்டி போலீஸூக்கு அரசாங்கத்தாரால் தரப்பட்டிருக்கும் வரம்பு மீறிய அதிகாரத்தை அழகாக சுட்டி காட்டி, அது குறைக்கப்பட வேண்டும்.

எனும் கோரிக்கையையும் சொல்லாமல் சொல்லி வந்திருக்கும் வெற்றி மாறனின் “விசாரணை’ – சரியான ‘தோரணை”!

ரைடிங் : 4.5