சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அரைச்ச மாவையே அரைத்து புளிக்க வைத்த முத்தையா.. விருமன் ஒரு நேர்மையான விமர்சனம்

முத்தையா இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் நேற்று விருமன் திரைப்படம் பெரும் ஆரவாரத்துடன் வெளியானது. முதல் ஷோ முடிவதற்குள்ளாகவே சோசியல் மீடியாவில் படம் தாறுமாறு ஹிட் என்ற கமெண்ட்டுகள் உலா வந்தது. ஆனால் அவை அனைத்தும் உண்மையில் படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரங்கள் தான் என்று படம் பார்த்த பிறகு பலருக்கும் தெரிந்திருக்கும்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கார்த்தியின் ரகளையான ஆட்டத்தை காண சென்ற மக்கள் தற்போது பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். அந்த வகையில் விருமன் திரைப்படம் ஆடியன்ஸை திருப்திப்படுத்தியதா என்று இங்கு விரிவாக காண்போம்.

கதைப்படி பிரகாஷ்ராஜ் மற்றும் சரண்யா பொன்வண்ணனுக்கு நான்கு மகன்கள் இருக்கின்றனர். அவர்களில் கடை குட்டியான கார்த்தி அம்மாவுக்கு செல்ல பிள்ளை. தன் கணவர் தனக்கு துரோகம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியாத சரண்யா, கார்த்தியை தன் அண்ணன் ராஜ்கிரணிடம் ஒப்படைத்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.

அதன் பிறகு மாமனிடம் வளரும் கார்த்தி முரட்டு சண்டியராக தன் அப்பாவுக்கு எதிராக வந்து நிற்கிறார். பின்னர் அவர் தன் அப்பாவுக்கு எதிராக ஒவ்வொரு வேலையும் செய்கிறார். அவர் எதற்காக தன் அப்பாவை எதிர்க்கிறார், இறுதியில் அப்பா, மகன் இணைந்தார்களா என்பது தான் படத்தின் கதை.

பல காலங்களுக்கு முன்பே நாம் பார்த்து சலித்த கதை தான் இந்த விருமன். பருத்திவீரன் கார்த்தியை எதிர்பார்த்து இந்த படத்திற்கு செல்லும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. கார்த்திக்கு இந்த கிராமத்து கெட் அப் பொருத்தமாக இருந்தாலும் இதற்கு முன்பு அவர் நடித்த மாடுலேஷனில் தான் இந்த படத்திலும் வருகிறார்.

அதாவது தொடை தெரியும்படி வேட்டியை கட்டிக்கொண்டு இறுக்கமான பளபள சட்டை மற்றும் தாடியுடன் தான் அவர் படம் முழுக்க வருகிறார். இதை நாம் கொம்பன் போன்ற படங்களில் பார்த்து விட்டதால் இப்படத்தில் பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. மேலும் படத்தில் பல சென்டிமென்ட் காட்சிகளும், வசனங்களும் இருந்தாலும் கதை ரொம்பவும் மெதுவாக நகர்கிறது.

அந்த வகையில் படத்தை ஆரம்பித்த முத்தையா எப்படி முடிப்பது என்று திணறி இருக்கிறார் என்பது பார்த்தாலே தெரிகிறது. புதிதான கதைக்களம் என்று எதுவும் இல்லாமல் முந்தைய படங்களின் சாயல் நிறைய இடத்தில் தெரிவதால் படம் முதல் பாதியிலேயே போர் அடிக்க ஆரம்பித்து விடுகிறது. அதிலும் சோசியல் மீடியாவில் இடைவேளை காட்சியை பற்றி ஆகா ஓகோ என்று புகழ்ந்து வருகின்றனர்.

ஆனால் அதில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இருக்கிறது. பக்கா கிராமத்து பெண்ணாக இருக்கும் அதிதி கொஞ்சம் கூட கூச்சப்படாமல் கார்த்திக்கு அத்தனை பேர் முன்னிலையில் லிப் கிஸ் கொடுப்பது என்ன லாஜிக் என்று தான் கேட்க தோன்றுகிறது.

இப்படி கதையில் சில தொய்வுகள் இருக்கின்றது. அதேபோல சில தேவையற்ற கதாபாத்திரங்களும் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அந்த வகையில் வடிவுக்கரசியின் கதாபாத்திரம் தேவையில்லாத ஆணியாக இருக்கிறது. மேலும் காமெடி காட்சிகளும் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை.

பெரிய வீட்டு பெண்ணான அதிதி சங்கர் கிராமத்து பெண்ணாக நடிப்பதற்கு நிறைய கஷ்டப்பட்டு இருக்கிறார். ஆனாலும் அவருக்கு ரொமான்ஸ் காட்சிகளில் எக்ஸ்பிரஷன் சுத்தமாக வரவில்லை. அவ்வளவு பெரிய இயக்குனரின் மகள் நடிப்பில் தடுமாறுவது பெரிய நெருடல்.

இவ்வளவு குறைகள் இருந்தாலும் படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை தான் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. அதிலும் அதிதியின் குரலில் மதுரை வீரன், கஞ்சா பூ கண்ணால பாடல்கள் திரும்பத் திரும்ப பார்க்க தூண்டுகிறது. ஆக மொத்தம் பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வெளியாகி இருக்கும் விருமன் கார்த்திக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இதன் மூலம் முத்தையா பீல்ட் அவுட் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்குகில்லை.

விருமன் படத்திற்கு எங்கள் சினிமா பேட்டையின் ரேட்டிங்- 2/5

- Advertisement -

Trending News