ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்களின் அமைதியான போராட்டத்தால் வீரேந்திர சேவாக் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தும் இப்போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பலராலும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இப்போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், “அமைதியான முறையில் தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவதைப் பார்க்க அற்புதமாக இருக்கிறது. உங்கள் உணர்வுகளிலும் அமைதி காக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அமைதியான போராட்டமே அனைவருக்கும் பாடமாக அமையும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.