புனே: ‘புனே அணிக்கு எதிரான லீக் போட்டியின் தோல்விக்கு வெளிநாட்டு வீரர்களே காரணம்,’என அந்த அணியின் பயிற்சியாளர் சேவக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் புனேவில் நடந்த 55வது லீக் போட்டியில், பஞ்சாப், புனே அணிகள் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் அணி இதுவரை இல்லாத அளவு படுமோசமான தோல்வியை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறியது. ஸ்மித் தலைமையிலான புனே அணி, 2வது இடத்துக்கு முன்னேறியது.
இப்போட்டியில், எப்போதும் இல்லாத அளவு, பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர்களான கப்டில், மேக்ஸ்வெல், மார்ஷ், மார்கன் என ஒருத்தர் கூட களத்தில் நிலைக்கவில்லை. தவிர, ஒரு பஞ்சாப் அணி வீரர் ஒருவர் கூட 20 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. இந்த படுதோல்விக்கு வெளிநாட்டு வீரர்களே பொறுப்பேற்க வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் சேவக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பயிற்சியாளர் சேவக் கூறுகையில்,’ எனக்கு மிகவும் ஏமாற்றமாக உள்ளது. ஒரு வெளிநாட்டு வீரர் கூட முதல் 15 ஓவர்கள் வரை நிலைக்க வேண்டும் என்ற பொறுப்பை ஏற்கவில்லை. அதற்கான பொறுப்பு அவர்களுடையது தான். கப்டில் முதல்பந்தில் அவுட்டானது அவருடைய தவறு இல்லை. அதன்பின் வரிசையாக சென்ற வீரர்கள் வேகமாக பெவிலியன் திரும்பியதே மிகப்பெரிய தவறு. இப்படி பொறுப்பில்லாத காரணத்தால் தான் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.’ என்றார்.