பிரேமம், 96 படத்தை விட சூப்பர்- பிரணவ் மோகன்லாலின் ஹ்ருதயம் விமர்சனம்

மலையாள சினிமாவில் அதிக எதிர்பார்ப்புக்கு நடுவில் 21 ஜனவரி 2022 ல் வெளியான படம் தான் இந்த ஹ்ருதயம் (இதயம்). பல ஸ்பெஷல் உள்ளது இந்த படத்தில். 30 வருடங்கள் கழித்து மீண்டும் புதிய பெயரில் மெர்ரி லேண்ட் ஸ்டுடியோஸ் மீண்டும் பட தயாரிப்பினுள் நுழைந்துள்ளனர். மோகன்லாலின் மகன் பிரணவ் நாயகன், ஸ்ரீனிவாசனின் மகன் வினீத் இயக்குனர். இது மட்டுமன்றி ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி இரண்டாவது நாயகி.

ஹ்ருதயம் ஒரு பீல் குட் சினிமா. தன் மனைவி மற்றும் தனது கல்லூரியில் நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு என்று கூட முன்பே இயக்குனர் பேட்டியில் சொல்லி இருந்தார். கல்லூரி பகுதிகள் நாம் பலரும் நிஜ வாழ்க்கையில் பார்த்தது, அனுபவித்ததாக தான் இருக்கும். அருண் நீலகண்டன் என்ற நாம் நாயகனின் 17 முதல் 30 வயது வரை ( coming-of-age drama) என்ன நடக்கிறது என்பதே கதை.

கதை – கேரளாவில் இருந்து நம் சிங்கார சென்னை வருகிறார் நாயகன் அருண். இங்கு ஹாஸ்டலில் சீனியர் ராகிங்- இவர் முறைப்பது என ஒருபுறம். மறுபுறம் கண்டதும் தர்ஷனா மீது காதல். இந்த லவ் பர்ட்ஸ் சிறகடிக்கிறது. முதலாம் ஆண்டு ஜாலி மோதல் என செல்ல, பிரேக் அப் ஆகிறது நாயகனுக்கு. இரண்டாம் ஆண்டு நண்பர்களுடன் ரூம் எடுத்து தங்கி குடி கும்மாளம், அரியர்ஸ், அடுத்த காதல் என நகர்கிறது வாழக்கை .

மூன்றாம் ஆண்டில் சுதாரித்துக்கொண்டு சக மாணவன் செல்வாவுடன் இணைந்து படிக்க ஆரம்பிக்கிறார். நண்பனின் மரணம், நான்காம் ஆண்டில் புதிய காதலியுடன் பிரிவு, பழைய காதலியுடன் நட்பு, கேம்பஸ் இன்டெர்வியுவில் வேலை கிடைப்பதுடன் சென்னையை விட்டு செல்கிறார் நாயகன்.

இரண்டாம் பாதியில் பார்க்கும் வேலை பிடிக்காமல் என்ன செய்வது என யோசிக்க திருமணத்துக்கு போட்டோ எடுக்கம் வேலைக்கு பார்ட்னராக இவரை அழைக்கிறார் ஜிம்மி.  இவரின் வாழக்கை அடுத்த பயணத்தில் இணைகிறார் நித்யா. பழைய நண்பர்களை அடிக்கடி சந்திப்பது என செல்ல; அருண் – நித்யா திருமணத்தில் நண்பர்கள் அனைவரும் சந்திக்கின்றனர்.

தனக்கு குழந்தை பிறந்ததும் போன் கால் தனது முதல் காதலிக்கு தான் பண்ணுகிறான் அருண். தன் கணவன் மீது உள்ள பாசத்தில் அவனை சந்தேகிக்கிறாள் நித்யா. கிளைமாக்ஸ் காட்சியில் தர்ஷனா திருமணத்திற்கு சென்னை வருகிறான், தான் படித்த கல்லூரியை விசிட் அடிப்பதுடன் முடிகிறது படம்.

சினிமாபேட்டை அலசல்– முதல் பாதி மட்டுமே நமக்கு முழு படம் பார்த்த திருப்த்தி கொடுக்கிறது. எங்க இரண்டாவது பாதியில் கஷ்டம், சோகம் என நம்மை வறுத்தெடுப்பார்களோ என நினைக்கும் நேரத்தில், படம் முழுக்க பாசிட்டிவிட்டி மட்டுமே. இந்த நேரத்தில் இப்படி ஒரு சினிமா என்பது நமது மனதுக்கு இதமான அனுபவமே. டெக்கினிக்கல் விஷயம், மேக்கிங், ஆர்ட்டிஸ்ட் என அனைத்துமே பிளஸ்.

சேரனின் ஆட்டோகிராப், நிவின் பாலியின் ப்ரேமம், ஜீவாவின் நீதானே என் பொன்வசந்தம், விஜய் சேதுபதியின் 96 போன்ற எண்ணற்ற படங்களின் வரிசையில் இதுவும் இணையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சினிமாபேட்டை வெர்டிக்ட் – வீட்டில் அமர்ந்து ஹாயாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் தாராளமாக மூன்று மணி நேரத்தை ஒதுக்கி இப்படத்தை கட்டாயம் பார்த்து ரசிக்கலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங்:  4/5