ஜார்க்கண்ட் மாநிலத்தில் அடிக்கடி பெண் குழந்தைகள்,சிறுமிகள், இளம் பெண்கள் என்று சர்வ சாதாரணமாக காணாமல் போய்விடுவார்கள். இவர்களை புரோக்கர்கள் ஆள் வைத்து கடத்தி பணம் சம்பாதிப்பதுடன் இந்த இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளை நல்ல விலைக்கு விற்றும் விடுவார்கள். இவ்வாறு கடத்தப்பட்ட சிறுமிகளை பாலியல் தொழிலுக்குப்பழக்கி அவர்களை பாழும் கிணற்றில் தள்ளிவிடுவார்கள்.

ஜார்க்கண்ட் மாநிலம் வறுமைமிகுந்த மாநிலமாகும். அங்கு வேலை வாய்ப்புகள்,விவசாய தொழில்கள் எல்லாம் மிகவும் குறைவு. இதை பயன்படுத்தி குழந்தைகளை கடத்துவது வாடிக்கையாக போய்விட்டது.

இதனால் கடந்த சில மாதங்களாகவே இளைஞர்கள் சற்று உஷார் நிலையில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஷேராய்க்கல் மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு 3 புதியவர்கள் வந்துள்ளனர். அவர்கள் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்ததால் அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் வந்தது. சற்று நேரத்தில் குழந்தை கடத்துபவர்கள் ஊருக்குள் சுற்றித்திரிகின்றனர் என்று வதந்தி போல பரவியது.

உஷாரான கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஊருக்குள் சுற்றி வந்த புதியவர்களை மடக்கிப்பிடித்தனர். அப்போது அவர்கள் ஏதோ கூற முற்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் அவர்களை பேச விடாமல் சரமாரியாக அடித்து துவம்சம் செய்துள்ளனர். இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஏற்கனவே பல சிறுமிகள் காணாமல் போன ஆத்திரத்தில் அடித்தே கொன்றுள்ளனர்.

இதே போல ஜாம்செட்பூர் மாட்டத்தில் சந்தேகத்துக்கு இடமாக திரிந்த 2 பேரை ஊர் மக்கள் அடித்தே கொன்றுள்ளனர். நேற்று காலை நடந்த இந்த இரண்டு சம்பவங்களிலும் 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த இரண்டு மாவட்டங்களிலும் மக்கள் கொந்தளிப்பில் உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது வெறும் வதந்தியால் மக்கள் அடித்து கொன்றுள்ளனர் என்றார். இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது