vil_ambuபள்ளி காலங்களில் கேயாஸ் தியரி (chaos theory), பட்டர் ஃப்ளை எஃபெக்ட் (butter fly effect) கேள்விப் பட்டிருப்பீர்கள். ஒரு விஷயத்துக்கும் மற்றொரு விஷயத்துக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இருக்காது, ஆனால் கண்டிப்பாக ஒரு மறைமுக தொடர்பு இருக்கும். இந்த தியரியை மையமாக வைத்து ஒரு டூயல் ஹீரோ கதைக்களத்தை கையாண்டுள்ளார் அறிமுக இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம்.

கதை:

ஸ்ரீ எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரை சுற்றும் போக்கிரி, ஒரு அரசியல் பிரமுகர் மகளான சம்ஸ்க்ருதி மேல் காதல், இது ஒரு பக்கம் இருக்க ஸ்ரீக்கு எதிர்மறையான குணம் கொண்ட மற்றொரு நாயகன் ஹரீஷ், வீட்டுக்கு அடங்கி நடப்பவர், அப்பா பேச்சை மீறாதவர், அதே சமயம் அப்பாவிற்கு பிடிக்காத தொழிலை பண்ண நினைக்கும் மகன், இவருக்கு ஸ்ருஷ்டி மீது காதல்.

இவர்களுக்கு எந்த சம்பந்தம் இல்லையென்றாலும் ஒருவர் செய்யும் விஷயம் மற்றொருவர் மீது பாதிப்பை ஏற்படுத்திக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மாறி மாறி ஒருவர் வில்லாகவும் மற்றொருவர் அம்பாகவும் செயல்படுகிறார்கள்.

இதற்கு இடையில் இவர்கள் இருவரையும் இணைக்கும் மையப்புள்ளி என்று சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் இருவருக்கும் சம்பந்தபட்ட ஒரு பாத்திரம் சாந்தினிக்கு, இவருக்கு ஹரீஷின் மீது ஒருதலை காதல்.

இக்கதாப்பாத்திரங்களுக்கு ஏற்பட்ட அசம்பாவிதங்களும் இந்த மூன்று காதல் கதைகளும் என்னவாகிறது என்பதை ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்போடு சொல்லிருக்கிறார் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம்.

விமர்சனம் 

வழக்கு எண் 18/9, ஓணாயும் ஆட்டுகுட்டியும் போன்ற தரமான படங்களில் நடித்த ஸ்ரீ இப்படத்திலும் தன் தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸிடம் எதிர்த்து பேசுவது, தனக்கே உரிய பாணியில் காதலை வெளிப்படுத்துவது, துறுதுறு என்று இருக்கும் உடல் மொழி என அனைத்திலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய எதிர்காலம் உண்டு. ஹரீஷ், அமூல் பேபி ஹீரோ, படம் முழுவதும் தனக்கு பிடித்த வேலையை செய்ய முடியாத ஏக்கத்தை அழகாக வெளிப்படுத்திறார்.

”ஆல சாச்சு புட்ட” பாடல் புகழ் சம்ஸ்க்ருதி பெரிதாக கதாப்பத்திரம் இல்லை என்றாலும் நம்மை கவர்கிறார். எப்போதும் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்காத சாந்தினி, ஹரிஷுக்கு மட்டும் தனி மரியாதை, ஒரு தலை காதல் என தன் பங்கை சரியாக செய்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே முதல் பாதி மட்டும் தான் வருகிறார். படத்தின் முதல் பாதியை நகர்த்தும் பொறுப்பில் யோகி பாபுவிற்கு பெரிய பங்கு உண்டு. இவரின் கலகலப்பான காட்சிகள் அப்லாஸ் அள்ளுகிறது. மெட்ராஸ் பட புகழ் நந்தகுமார் கண்களாலே மிரட்டுகிறார். ஹரீஷ் உத்தமனும் அவரது பங்கை சரியாக செய்துள்ளார்.

சிறப்பு

ஸ்ரீயின் நடிப்பு, யோகி பாபுவின் கலகலப்பான காமெடி, படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுவென நகரும் திரைக்கதை. இக்கதை இடியாப்ப சிக்கல் போல் இருந்தாலும் அதை சரியாக கையாண்ட படக்குழு. பாடல்கள் அதிகமாக இல்லாதது திரைக்கதைக்கு கூடுதல் பலம்.

ரிசல்ட்

மொத்தத்தில் இந்த வில் அம்பு முதல் பாதியில் சற்றே தடுமாறி இரண்டாம் பாதியில் தனது இலக்கை அடைகிறது.

ரைடிங் : 2.75/5