நடிகையாக இருப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.. விக்ரம் பட நடிகைக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்

பொதுவாக சினிமாவில் நடிக்கும் நடிகைகள் அனைவரும் நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு ஜாலியாக நடித்துவிட்டு போகிறார்கள் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உண்டு. அது ஒருபுறம் உண்மையாக இருந்தாலும் அந்த நடிகைகளின் வாழ்க்கையில் பல துயரங்களும் இருக்கிறது.

அப்படி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்களை பற்றி பிரபல நடிகை சங்கீதா மனம் திறந்து பேசியிருக்கிறார். இவர் விக்ரமின் பிதாமகன் திரைப்படத்தின் மூலம் அதிக பிரபலமானவர். சில வருடங்களுக்கு முன் சங்கீதாவின் மேல் அவருடைய தாய் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார். சங்கீதா தன்னை வீட்டை விட்டு துரத்தியதாகவும், பணம் கொடுக்க மறுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபற்றி கூறிய சங்கீதா, பெற்றோர்கள் அனைவரும் செய்யும் மிகப் பெரிய தப்பு சிறு வயதிலேயே தங்கள் பிள்ளைகளை நடிக்க அனுப்புவது தான். அப்படி அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குடும்பமே உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.

அப்படித்தான் என் வீட்டிலும் நடந்தது. நான் பதிமூன்று வயதிலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டேன். அதிலிருந்து நான் திருமணம் ஆகும் வரை என் அம்மாவுக்கும், சகோதரர்களுக்கும் நிறைய சம்பாதித்து கொடுத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் அதை சேர்த்து வைக்காமல் ஊதாரித்தனமாக செலவு செய்து விட்டார்கள்.

பிறகு நான் திருமணம் செய்து கொண்டு என் குடும்பத்தை கவனித்து வந்தேன். அதுவரை என்னை கொண்டாடி வந்த என் குடும்பம் திருமணத்திற்குப் பிறகு எனக்கு எதிராக திரும்பியது. ஏனென்றால் அதுவரை பணம் சம்பாதித்துக் கொடுத்த நான் பிறகு என் குடும்பத்திற்காக வாழத் தொடங்கினேன்.

இருந்தும் முன்பு போல் இல்லாமல் கணிசமான ஒரு தொகையை நான் அவர்களுக்கு கொடுத்து வந்தேன். ஆனால் அவர்கள் மனசாட்சியே இல்லாமல் என் மீது பழி போடுகிறார்கள். எனக்கு திருமணம் நடந்த பிறகுதான் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். என் கணவர்தான் எனக்கு செக் எப்படி எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

இதுபோன்று என்னுடைய வாழ்க்கையில் மட்டுமல்லாமல் பல நடிகைகளின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. நடிகையாக இருப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. சில நடிகைகள் சாகும் வரையில் கூட இதுபோன்று கஷ்டப்பட்டு அடிமையாக இருந்து இறந்து போயிருக்கிறார்கள்.

ஆனால் நான் என் கணவரால் சுதாரித்துக் கொண்டேன். இப்பொழுது நான் என் குழந்தைக்காகவும் கணவருக்காகவும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையில் 15 வருடங்கள் என் குடும்பத்தால் வீணாகப் போய்விட்டது என்று சங்கீதா தன் கடந்த கால கசப்பான அனுபவங்களை பற்றி வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்