கேஜிஎப், ஆர்ஆர்ஆர் எல்லாம் பின்னாடி போங்க.. பின்னிப் பெடலெடுக்கும் விக்ரம்

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய்சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம் தற்போது அரங்கம் நிறைந்த ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கர்ணல் விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் கமல் விளையாடி இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு படத்தில் அவர் மிகவும் இயல்பாக நடித்துள்ளார். சிறுவயது கமல் போல் மிரட்டலான நடிப்பை இந்த படத்திலும் அவர் வெளிப்படுத்தி ரசிகர்களின் கைதட்டலை பெற்றுள்ளார்.

அவர் மட்டுமல்லாமல் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், அனிருத்தின் இசை ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பு, அறிவு போன்ற அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அந்த வகையில் கனகச்சிதமாக கேரக்டர்களை தேர்ந்தெடுத்த லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வலுவான கதாபாத்திரத்தை சரியாக செய்திருப்பது அனைவரின் கைதட்டலையும் பெற வைத்துள்ளது. புலன் விசாரணை அதிகாரியாக வரும் பகத் பாஸில் தன்னுடைய நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை காட்டியுள்ளார்.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தில் பவனியாக அனைவரையும் மிரட்டிய விஜய் சேதுபதி இந்த படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் மிரள வைத்துள்ளார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தியேட்டர்களில் விசில் பறக்கிறது. கஞ்சா அடித்து விட்டு கோஸ்டாக மாறி அவர் செய்யும் வில்லத்தனம் ரசிகர்கள் எதிர்பாராத அளவுக்கு இருக்கிறது.

இப்படி படத்தில் பல டுவிஸ்ட்கள் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சூர்யாவின் கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு கேரக்டரில் துணிந்து நடித்திருக்கும் சூர்யாவுக்கு தனி தைரியம் வேண்டும் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

போதைப் பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க மெனக்கெடும் கமலும், அவருக்கு எதிராக நிற்கும் விஜய் சேதுபதியும் மோதும் சண்டைக் காட்சிகள் அபாரமாக இருக்கிறது. இப்படி படத்தில் இருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றையும் சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு விக்ரம் திரைப்படம் தற்போது ரசிகர்களை கவர்ந்து சர்வதேச அளவில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்