‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து விக்ரம், கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், இதற்கிடையில் விஜய் சந்தர் இயக்கத்திலும் விக்ரம் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பின்னி மில்லில் விமான நிலையம் போன்று செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதை என்னவென்பது தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தில் பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு கார்களின் கதவுகளை உடைத்து அதை திருடும் கும்பல்களை மையப்படுத்திய கதைதான் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்த ‘பொல்லாதவன்’ படத்தில் இதுபோன்று பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பைக்குகளை திருடிச் சென்று அதை வேறு மாநிலத்திற்கு கொண்டு போய் விற்கும் கும்பலை பற்றிய கதையாக வெளிவந்தது. அதேபோல், இந்த படமும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். இவருடைய 13 நாள் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கவுதம் மேனன், விஜய் சந்தர் படங்களை முடித்துவிட்டு ஜுன் மாதத்தில் ஹரியுடன் ‘சாமி-2’ படத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.