தமிழ் சினிமாவில் எப்போதுமே இரண்டு நடிகர்களின் சகாப்தம்தான் இருந்து வருகிறது. எம்ஜிஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என ஒரே சமயத்தில் அவர்களுக்கிடையில் தான் போட்டி என்பது அதிகமாக இருக்கும். அவர்களைத்தான் ரசிகர்கள் அதிகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற நடிகர்கள் அவர்களுக்கு அடுத்த நிலையில்தான் தங்களுக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

விஜய் – அஜித் ஆகியோருக்குப் பிறகு அந்த வட்டத்திற்குள் சிம்பு – தனுஷ் இடம் பிடிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், சிம்பு எப்போதோ ஒரு முறை மட்டுமே படங்களில் நடித்து தன்னுடைய தடத்தை மாற்றிக் கொண்டுவிட்டார். தனுஷும் தன்னை கமர்ஷியல் ஹீரோவாகவே முன்னிறுத்திக் கொள்ள விரும்புகிறார். இருவரும் தங்களது பாதையை சரியாகத் தேர்வு செய்யாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்களோ என்று எண்ண வைக்கிறது.

இப்போது விஜய் – அஜித் வரிசையில் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி ஆகியோர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாகவே கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். சிவகார்த்திகேயனின் சமீபத்திய வெற்றிப் படமான ரஜினி முருகன் படத்தை வாங்கியவர்களுக்கு இரு மடங்கு லாபத்தைப் பெற்றுத் தரும் என்று சொல்கிறார்கள். அதே போல விஜய் சேதுபதியின் கடைசி வெளியீடான நானும் ரௌடிதான் படமும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்த வெற்றியின் காரணமாக அவருடைய அடுத்த வெளியீடுகளான காதலும் கடந்து போகும், சேதுபதி, இறைவி ஆகியவையும் நல்ல விலைக்கு பேசப்பட்டுள்ளன.

சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியும் தொடர்ந்து கவனமாக நடித்து வந்தால் அடுத்த போட்டியாளர்களாக அவர்கள்தான் வருவார்கள் என்கிறார்கள். மற்றவர்கள் அவர்களுடன் போட்டி போட வேண்டிய சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவரின் சவாலை மற்றவர்களால் எதிர் கொள்ள முடியுமா?