ரஜினிகாந்த் நடிக்க இருந்த ஒரு படத்தின் வாய்ப்பு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கைவசம் மாறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

வருடத்திற்கு இரண்டு படத்தில் நடிக்கவே திணரும் நடிகர்கள் மத்தியில் விஜய் சேதுபதி ஒரு தனி பாதையையே அமைத்து இருக்கிறார். வருடத்திற்கு குறைந்தது 6 முதல் 7 படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். அதற்கு சமமாக, வருடத்தில் 6 படங்கள் திரைக்கும் வந்து விடுகிறது. எல்லா படமுமே மாஸ் ஹிட் என்ற சொல்ல முடியாது என்றாலும், போடப்பட்ட முதலீட்டை எடுக்கும் படமாகவே அமைகிறது.

இந்த வருடம் அவர் நடிப்பில் சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், இடம் பொருள் ஏவல், ஜூங்கா, சங்குத்தேவன், வசந்த குமாரன், 96, ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்புராஜ் காம்போவில் ஒரு படம் என அரை டஜனுக்கும் அதிகமான படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். துணை நடிகராக கோலிவுட்டில் அறிமுகமானாலும், தனது உழைப்பாலும் எதார்த்தமான நடிப்பாலும் இன்று ஸ்டார் நாயகர்களின் பட்டியலில் இருக்கிறார். அதிலும், ஒரே நேரத்தில், தமிழ் சூப்பர்ஸ்டார், பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுடன் ஒரு படம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி படம் என அசத்தி வருகிறார்.

இத்தனை படங்கள் இருக்கும் நிலையில், விவசாயம் சம்பந்தப்பட்ட கதை ஒன்றிலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. அந்த படத்தை ஆண்டவன் கட்டளை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கலாம். கடைசி விவசாயி என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விவசாயியாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும், தற்போதைய சூழலுக்கு ஏற்ப விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவமாக இப்படம் உருவாக்கப்பட இருக்கிறது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இப்படத்தின் கதை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடமே சொல்லப்பட்டதாம். கதையை விரும்பினாலும், தொடர்ந்து படங்களிலும், அரசியலிலும் கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இப்படத்தை தவிர்த்து விட்டாராம். இதையடுத்து, அதே, நடிப்பை வெளிப்படுத்தும் விஜய் சேதுபதிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.