விஜய் அரசியல், விடாமுயற்சி எது எப்படி போனா எனக்கென்ன.. மீண்டும் தன்னோட ஒருவழிப் பாதையில் அஜித்!

தமிழ் நாட்டில் இருந்து உலகளவில் ரேஸராக அறியப்படுபவர்கள் நரேன் கார்த்திகேயன், நடிகர் அஜித்குமார். ரேஸர் என்றாலே முதலில் கண்முன் வருவது அஜித்தின் விடாமுயற்சியும் அவரது தன்னம்பிக்கையும்தான். தன் கனவுகளை இடைவிடாமல் முயற்சி செய்ய வேண்டும் என்று அஜித் தன் செயல்களின் வழி ஊக்குவிப்பவராகவும் அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சினிமாவில் நடிகராக இருந்தாலும் துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ், பைக் ரேஸ், ட்ரோன் வடிவமைத்தல், புகைப்படம் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் காட்டி வருவதால் அவர் பன்முகக் கலைஞராக இருப்பதும் கூட அவரது ரசிகர்களுக்கு பெருமிதமாக உள்ளது.

இந்த நிலையில், துணிவு படத்தின் வெற்றிக்குப் பின் அஜித்குமார், மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அஜர்பைஜான், ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் இப்பட ஷூட்டிங் நடைபெற்று முடிந்த நிலையில் இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகலாம் என தகவல் வெளியாகிறது.

இப்பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே மார்க் ஆண்டனி என்ற ஹிட் படம் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் வேலைகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனக்கு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அஜித்குமார் பைக்கில் உலக சுற்றுப் பயணம், இந்தியாவில் பயணம் செய்வதுடன், கார் ரேஸிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில், துபாயில் உள்ள கார் ரேஸ் தளத்தில் BMW மற்றும் ரேஸ் காரில் சீறிப்பாய்ந்தார். இதுகுறித்த வீடியோக்களும் வைரலாகின.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு துபாயில் ரூ. 9 கோடி மதிப்பிலான சிவப்பு நிறத்தில் உலகின் விலையுயர்ந்த கார் பிராண்டான ஃபெராரி கார் ஒன்றை வாங்கினார். இதையடுத்து, அண்மையில் மற்றொரு பிரபல கார் பிராண்டான போர்ச் GT3 R 5 ரக வெள்ளை நிறத்திலான காரை அஜித்குமார் வாங்கியதாக அவரது மனைவி ஷாலினி தன் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார். இந்தக் கார் ரூ. 4 கோடி விலை மதிப்புடையதாகும்.

இந்த நிலையில், அஜித்குமார் மீண்டும் கார் ரேஸில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகிறது. அதன்படி, European GT4 Championhip -2025 மோட்டார் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்க அஜித் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாட்டு அணிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக Federation of Motor Sports clubs of India தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சினிமாவில் விஜய்க்குப் போட்டியாளராக அஜித் பார்க்கப்படும் நிலையில், விஜய் அரசியலுக்கு கிளம்பிய போதிலும் கோலிவுட்டில் அவரது இடத்திற்கும் வசூலுக்கும் மற்ற நடிகர்களைப் போல் போட்டியிடாமல், தன் சினிமா தொழிலின் மீது கவனம் செலுத்தாமல், அஜித் வழக்கம் போல தன்னுடைய பாணியில் தனக்குப் பிடித்ததை மட்டுமே செய்து வருவது அவரது இயல்பான குணாதிசயத்தைக் காட்டுவதாக நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

European GT4 Championhip -2025 மோட்டார் கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள அஜித்குமார் அதில் நிச்சயம் ஜெயித்து, சாம்பியன் கோப்பை வென்று நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என சினிமாத்துறையினரும் ரசிகர்களும் அவருக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News