முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்கிற அப்பல்லோ தகவல்களால், அதிமுக வினருக்கு மட்டுமல்ல, கட்சி சாராத தாய்குலங்களுக்கும் கூட பெருத்த மகிழ்ச்சி. அவரது உடல் நிலையை நேரில் விசாரிப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் மருத்துவமனைக்கு சென்று வந்தது, அரசியல் வானின் ஆரோக்கிய சிக்னல்! எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும், சமுகத்தின் பல்வேறு மட்ட பிரமுகர்களும் அன்றாடம் மருத்துவமனைக்கு சென்று வருகிறார்கள்.

திரையுலக நட்சத்திரங்களும் கூட, முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்து வர விரும்புகிறார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன் மகள் ஐஸ்வர்யாவோடு அப்பல்லோவுக்கு சென்று வந்தது நினைவிருக்கலாம்.

இந்தநிலையில்தான் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து ஒரு தகவல் பரவி வருகிறது. தற்போது பைரவா படப்பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் விஜய், போவதற்கு முன்பு அப்பல்லோ செல்ல நினைத்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, “முதல்வர் எப்படியிருக்காங்க?” என்று சில முக்கியஸ்தர்களுக்கு போன் செய்து விசாரித்தும் வந்தாராம். முறையான அனுமதியோடுதான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதால், அனுமதிக்காக காத்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

“வரலாம்” என்று கதவுகள் திறக்கப்பட்டால், இரண்டாவது தளம் வரைக்கும் விஜய்யும் சென்று நலம் விசாரிப்பார் என்பதுதான் இப்போதைய பரபரப்பு. ஆனால் அப்படியொரு சிக்னல் வருமா? அதுதானே முக்கியம்!