எஸ்.எஸ்.ராஜமௌலியின் “பாகுபலி-2” திரைப்படத்தின் வெளியீட்டை தென்னிந்திய திரையுலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது! இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாவதாக சொல்லப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக இன்று அதிகாலையிலேயே பாகுபலி-2 டிரைலர் வெளியாகிவிட்டது. யார் வெளியிட்டார்கள் என்று படக்குழுவினர் ஆராய்ச்சிகளை ஒரு பக்கம் மேற்கொள்ள இன்னொரு பக்கம் அதிகாரபூர்வமாகவும் வெளியிட்டுவிட்டனர்.

பாகுபலி-2 தமிழ் பதிப்பின் டிரைலருக்கு குறுகிய நேரத்திலேயே 3 லட்சத்திற்கும் மேலான ஹிட்ஸ் கிடைத்து நிமிடத்துக்கு நிமடம் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது! தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 28ஆம் தேதி “பாகுபலி-2” வெளியாகிறது. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த “பாகுபலி” முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப் பெரிய அளவில் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் “பாகுபலி-2” வின் தமிழக சாட்டிலைட் உரிமையை விஜய் டி.வி. பெரும் தொகைக்கு வாங்கியிருக்கிறது. இதனை விஜய் டிவி நிறுவனமே உறுதி செய்துள்ளது. “பாகுபலி” முதல் பாகத்தின் சாட்டிலைட் உரிமையை ஜெயா டி.வி. நிறுவனம் வாங்கியிருந்தது. தற்போது அங்கு நிர்வாக ரீதியிலான குழப்பங்கள் நிலவுவதால் பாகுபலி-2 படத்தை வாங்க ஜெயா டிவி ஆர்வம் காட்டவில்லை. இப்படத்தை தமிழகத்தில் விநியோகிப்பதற்கான உரிமையை ஸ்ரீகிரீன் புரடக்ஷன்ஸ் மிகப் பெரிய தொகைக்கு வாங்கியது.