பரதன் இயக்கத்தில் நடித்த பைரவா படத்தையடுத்து தற்போது மீண்டும் தெறியை இயக்கிய அட்லி இயக்கும் தனது 61வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்யுடன் காஜல்அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், கோவை சரளா, எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, சத்யன் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள பின்னி மில்லில் போடப்பட்டுள்ள செட்டில் நடந்து வருகிறது.

மேலும், இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடிப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. அப்பா விஜய், அவருக்கு இரண்டு மகன்கள் என மூன்று வேடத்தில் நடிக்கிறாராம் விஜய். இதில் அப்பாவாக நடிப்பவர் தாடி, மீசையுடன் சிங் கெட்டப்பில் நடிக்கிறார். அவர் தோன்றும் பிளாஷ்பேக் காட்சிகள்தான் தற்போது படமாகி வருகிறது. அதையடுத்து மகன்களாக நடிக்கும் விஜய் தோன்றும் காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்படுகிறதாம். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நித்யாமேனனும், மகன் விஜய்களுக்கு ஜோடியாக சமந்தா, காஜல்அகர்வால் ஆகிய இருவரும் நடிக்கிறார்களாம்.