5 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் விஜய் சேதுபதியின் படம்.. உதவுங்கள் சாகும் வரை மறக்க மாட்டேன் எனக் கூறிய இயக்குனர்

தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தனது கால் தடத்தை பதித்து வருகிறார். ஒரு சமயத்தில் கூட்டத்தில் ஒருவராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய் சேதுபதியை தென்மேற்கு பருவக்காற்று படம் மூலமாக நாயகனாக திரை உலகில் அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குனர் சீனு ராமசாமி என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இவர்கள் இருவர் கூட்டணியில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படம் தேசிய விருது பெற்றது. இதனையடுத்து விஜய் சேதுபதி இயக்குனர் சீனு ராமசாமியின் ஆஸ்தான நடிகராக மாறினார். தொடர்ந்து இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக தர்மதுரை படத்தில் கூட்டணி அமைத்தனர். இப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமி கூட்டணி அமைத்த படம்தான் இடம் பொருள் ஏவல். இப்படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்காக முதல் முறையாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், வைரமுத்துவும் இணைந்தனர். படத்தின் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அனைத்து வேலைகளும் முடிந்து படம் வெளியாகும் சமயத்தில் படத்தைத் தயாரித்த இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கியது. இதனால் இப்படம் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கிறது. எனவே தற்போது இப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது.

seenu-ramaswami-twit
seenu-ramaswami-twit

இதுகுறித்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு இயக்குனர் சீனுராமசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “ஈரோஸ் இன்டர்நேஷனல் என்ற பெருநிறுவனம் கொஞ்சம் அன்பு வைத்தால் இடம் பொருள் ஏவல் படம் வெளிவரும். படைப்பும் அதன் மீதான உழைப்பும் உயிர் பெறும். ஒப்பந்தங்களும் நிறைவேற்றம் பெறும். உடல் தீப்பந்தம் தாங்கும் வரை இந்த உதவியை மறவேன்” என கூறியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்