மணிரத்னம் அறிமுகப்படுத்தியும் சோபிக்காமல்போன ஹீரோ கௌதம் கார்த்திக்தான். பல படங்களில் நடித்தும் க்ளிக் ஆகாமல் இருந்தவர் இப்போதுதான் மெல்ல தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறார். இந்திரஜித், முத்துராமலிங்கம், ஹர ஹர மஹாதேவகி, இவன் தந்திரன் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் கௌதம் கார்த்திக்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படமொன்றில் கௌதம் கார்த்திக் நடிக்கவிருக்கிறார். தற்போது இப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் முக்கிய வேடமொன்றில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை பல தரப்பட்ட வேடங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதி இந்த படத்தில் பழங்குடி இன மக்களின் தலைவராக நடிக்கவிருக்கிறார். கௌதம் கார்த்திக் கல்லூரி மாணவனாக நடிக்கிறாராம். அதாவது மாவீரன் கிட்டு படத்தில் பார்த்திபன் நடித்ததுபோன்ற வேடத்தில் விஜய்சேதுபதியும், விஷ்ணுவிஷால் நடித்ததுபோன்ற வேடத்தில் கௌதம் கார்த்திக்கும் நடிக்கின்றனர். காதலும், காமெடியும் கலந்த அட்வென்சர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கான கதாநாயகி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்குகிறது.