தமிழ்சினிமாவில் சேரன் பாணி என்று ஒரு தனி பாணி இருக்கிறது. குடும்ப உறவுகளை ஒரு பூப்போல விவரிப்பது அவரது ஸ்டைல். பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து போன்ற படங்கள், சேரனின் புகழை இன்னும் பல வருஷங்களுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கும். ஆனால் நாகரீக மாற்றத்தில் நல்ல படங்களை எல்லாம் சோப்பு டப்பா என்று விமர்சிக்க ஆரம்பித்த இளசுகள், சேரனையும் அப்படியொரு முட்டு சந்தில் தள்ளி வைத்த கதை, சோகத்திலும் சோகம்.

ஆனால் சீனு ராமசாமியின் தர்மதுரை வெளிவந்து ஹிட் அடித்த பின்பு, குடும்ப கதைகளுக்கு மறுபடியும் ஒரு மவுசு. இந்த நிலையில்தான் டைரக்டர் அமீர், விஜய் சேதுபதியை சந்தித்தாராம். “சேரன் மாதிரி ஒரு நல்ல இயக்குனர், பெரிய நடிகர்களின் கால்ஷீட் கிடைக்காமல் சோர்ந்து போயிருப்பது தமிழ்சினிமாவுக்கு நல்லதல்ல. உங்களை மாதிரி நடிகர்கள் அவருக்கு ஆதரவு தரணும்” என்று கேட்டுக் கொள்ள… உடனடியாக சேரனை அழைத்து கதை கேட்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

மனசுக்கு பிடித்த மாதிரியான ஒரு குடும்பக்கதையாம் அது. “உடனே வேலையை ஆரம்பிங்க” என்று கூறிவிட்டார். இன்னும் சில வாரங்களில் ‘சேரன், விஜய் சேதுபதி இணைந்து கலக்கும்’ என்று விளம்பரம் வந்தால், அது தமிழ்சினிமாவின் ஆரோக்கியதற்கு தங்க பஸ்பம் கொடுத்த மாதிரி.

வாழ்க விஜய் சேதுபதி!