ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கும் PETA அமைப்பை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இவர்களுக்கு எதிராக தமிழர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

கடந்த ஐந்து நாட்களாக தமிழகம் முழுவதும் பெரும் போராட்டமே நடக்கிறது. இதில் இசையமைப்பாளர்கள் ஆதி, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் இயக்குனர்கள் அமீர், ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் ஆரி, மயில்சாமி, ஆர்.ஜே.பாலாஜி, ராகவா லாரன்ஸ், சிம்பு ஆகியோர் களத்தில் இறங்கியும் இன்னும் சில திரை பிரபலங்கள் ட்விட்டர் மூலமாகவும் குரல்கொடுத்து வருகிறார்கள்.

நேற்று நடிகர் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதில் ரஜினி, கமல், அஜித், விக்ரம், சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். ஆனால் விஜய் கலந்துகொள்ளவில்லை. அதற்கு பதிலாக இன்று அதிகாலை 2 முதல் 5 மணிவரை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராடும் கூட்டத்தில் முகமுடியுடன் கலந்துகொண்டு தனது முழு ஆதரவை மாணவர்களுக்கு அவர் வழங்கியுள்ளார்.

இதன்மூலம் ஜல்லிகட்டுக்காக உண்மையாக போராடும் மாணவர்களுக்கே தனது ஆதரவு என்பதை விஜய் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.