பாஜக எம்பிக்கள் மக்களுடன் சேர்ந்து ஏடிஎம் வரிசையில் நிற்க வேண்டும் என தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை திரையுலக பிரபலங்களில் பெரும்பாலானோர் வரவேற்றனர். இளைய தளபதி விஜய் தான் மோடியின் நடவடிக்கையை வரவேற்றதோடு அதனால் மக்கள் படும் பாட்டை துணிச்சலாக கூறினார்.

இளைய தளபதியை அடுத்து மோடியின் நடவடிக்கையை துணிச்சலாக விமர்சித்தவர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண். இப்படி ஒரு நடவடிக்கையை எடுப்பதற்கு முன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டிருக்க வேண்டாமா என கேட்டார் பவன்.

தற்போதுள்ள நிலையை பார்த்தாலே தெரிகிறது மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஒழிப்பதற்கு முன்பு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் பவன்.

ஏடிஎம் மையங்கள் முன்பு நீண்ட வரிசையில் நிற்கும் மக்களின் நிலையை மனதில் வைத்து பவன் கூறுகையில், தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் உள்ள பாஜக எம்.பி.க்கள் மக்களின் நிலையை புரிந்து கொள்ள, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க ஏடிஎம் வரிசைகளில் நிற்க வேண்டும் என்று பவன் கூறினார்.

நேற்றும், இன்றும் வங்கிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஏடிஎம் மையங்களை தேடி அலைகிறார்கள். அதில் பல ஏடிஎம்களில் பணம் இல்லை, பணம் இருக்கும் எந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டு மட்டும் வருகிறது.