கடந்த சில வருடங்களாகவே விஜய்யின் தமிழ் சினிமா மார்க்கெட் மற்ற நடிகர்களை விட ஒரு கை ஓங்கியுள்ளது. இதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். மற்ற முன்னணி நடிகர்களை விட விஜய்யின் படங்கள் தமிழக அளவில் பெரிய அளவில் வசூல் செய்து வருகின்றன.
அதேபோன்று அண்டை மாநிலங்களிலும் விஜய் படங்களின் வசூல் படத்திற்கு படம் கோடிக்கணக்கில் அதிகரித்து வருகிறது. முதலில் தெலுங்கு சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த விஜய்க்கு சமீபகாலமாக தெலுங்கில் ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளதை காண முடிகிறது.
கடைசியாக வெளியான மாஸ்டர், பிகில் போன்ற படங்கள் அனைத்துமே தெலுங்கில் 20 கோடிக்கு மேல் வசூல் சாதனைகளை செய்துள்ளன. இதை கருத்தில் கொண்டு அடுத்தடுத்த தன்னுடைய படங்களில் தெலுங்கு ரசிகர்களை கவரும் வண்ணம் காட்சிகள் இருக்கும்படி பார்த்து வருகிறாராம்.
இந்த நேரத்தில்தான் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு விஜய்யை வைத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கும் புதிய படத்தை மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாகவும், அந்த படத்திற்கு விஜய் கேட்காமலேயே 100 கோடிக்கு மேல் சம்பளம் கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னரெல்லாம் ரஜினி படத்தில் நடித்தால் போதும், அவர் கேட்டதைவிட அளவுக்கதிகமாக தயாரிப்பாளர்கள் அள்ளிக் கொடுப்பார்கள். தற்போது அதேதான் விஜய்க்கும் நடந்து வருகிறதாம். சமீபகாலமாக விஜய் சம்பளத்தை நிர்ணயிக்கவில்லை, விஜய் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான் அவருக்கு அள்ளிக் கொடுக்கின்றனர் என்கிறார்கள்.
இதுகுறித்து சினிமா வட்டாரங்களில் விசாரிக்கையில் ரஜினியின் வயதுக்கும் உடல் நிலைக்கும் இன்னும் சில வருடங்கள் மட்டுமே அவர் சினிமாவில் ஜொலிப்பார் எனவும், அதன் பிறகு விஜய் தான் என்பதால் அவருக்கு இப்போதே ஐஸ் வைக்கத் தொடங்கி விட்டனர் எனவும் கூறுகின்றனர்.
