இளைய தளபதி… சாரி! ‘தளபதி’ விஜய்யின் மெர்சல் படத்திற்கு, சல்லி பைசா செலவில்லாமல் இன்று நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பப்ளிசிட்டி தேடிக் கொடுத்துள்ளது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

தமிழகத்தின் டெங்கு நோயினால் தினம் தினம் 10 பேராவது செத்து மடிந்து கொண்டிருக்க, அதையே ஓவர்டேக் செய்து ஹைஸ்பீடில் போய் கொண்டிருக்கிறது ‘மெர்சல்’ படத்தின் பிரச்சனை.

mersal

கடந்த 18-ஆம் தேதி தீபாவளியன்று வெளியான ‘மெர்சல்’ படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து எதிர்மறையான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

‘இந்த வசனங்களை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், படத்தின் மீது வழக்கு தொடர்வோம்’ என பாஜகவின் தமிழகத் தலைவரான தமிழிசை செளந்தரராஜன் நேற்றுமுன்தினம் எச்சரித்து இருந்தார்.

mersal-box

தமிழிசையை விட ஒருபடி மேல் சென்று பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “மெர்சல் பட வசனம், விஜய் அவர்களின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது. முதலில், ஜிஎஸ்டி என்பது புதிய வரி அல்ல. சாராயத்திற்கு 58 சதவீதத்துக்கு மேல் வரி விதிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளிக் கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஜோசஃப் விஜய்யின் மோடி வெறுப்பே மெர்சல்” என்று ஒரு போடு போட்டார்.

mersal

இதனை வருடங்களாக ‘இளைய தளபதி’ விஜய்யாக அறியப்பட்ட நடிகர் விஜய்யை, ஜோசஃப் விஜய் என்று அறிமுகம் செய்தார் ஹெச்.ராஜா. மதம் சார்ந்த இந்த தாக்குதலால், இவ்விவகாரம் டெங்கு பிரச்சனையை பரனியில் போடும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதனால் மெர்சல் திரைப்படம், இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ரீச்சாகி, ராகுல் காந்தி வரை ஆதரவு தெரிவிக்கும் வரை சென்றுவிட்டது. குறைந்தது இன்னும் மூன்று நாளைக்கு மெர்சல் அரசியல் தான் ஓடும் என எதிர்பார்க்கலாம்.

vijay

சரி! மோடியின் பாஜக அரசை கொந்தளிக்க வைத்த மெர்சல் படத்தில் விஜய் பேசிய பன்ச் வசனங்கள் என்ன என்பதை இங்கே பார்ப்போம்.

“7 சதவீதம் ஜிஎஸ்டி வாங்கும் சிங்கப்பூர் அந்த நாட்டு மக்களுக்கு மருத்துவத்தை இலவசமாக தரப்போ, 28 சதவீத ஜிஎஸ்டி வாங்கும் நம்ம அரசாங்கத்தால ஏன் மருத்துவத்தை இலவசமாக தர முடியல?.

மெடிசினுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டியாம், ஆனால் தாய்மார்களின் தாலியை அறுக்கும் சாராயத்துக்கு ஜிஎஸ்டியே கிடையாது. நம்ம நாட்டோட நம்பர் 1 மருத்துவமனையில ஆக்சிஜன் சிலிண்டரே இல்லை. என்னடா காரணம் கேட்டா, ஆக்சிஜன் சப்ளை பன்ற நிறுவனத்துக்கு 2 வருஷமா பணம் பாக்கியாம்.

mersal

இன்னொரு கவர்மென்ட் ஆஸ்பிட்டல் டையாலிசிஸ் பன்றப்ப கரென்ட் கட் ஆகி 4 பேர் செத்தே போயிட்டாங்க. ஒரு பவர் பேக்கப் கூட இல்லை. இன்குபேட்டரில் இருந்த குழந்தை பெரிச்சாலி கடிச்சு இறந்தத நம்ம ஊர்ல மட்டும்தான்யா பாக்க முடியும்.

ஜனங்க நோயை பார்த்து பயப்படறத விட கவர்மென்ட் ஆஸ்பிட்டல்ஸ பார்த்துதான் பயப்படறாங்க. அந்த பயம்தான் பிரைவேட் ஆஸ்பிட்டல்ஸோட இன்வெஸ்மென்ட்” என்று விஜய் வசனம் பேசியுள்ளார்.

mersal magic
mersal magic

அப்ப உங்க கொலையை நியாயப்படுத்த பாக்கிறீங்களா? என படத்தில் செய்தியாளர் ஒருவர் விஜய்யிடம் கேள்வி எழுப்புகையில், நான் செஞ்சது கொலையே இல்ல. எவன் சொன்னான். செல்லரிச்சு போன மெடிக்கல் சிஸ்டதோட கிளீனிங் பிராசஸ்” என்று விஜய்யின் வசனம் இடம்பெற்றுள்ளன.

இந்த அதிரடி பன்ச்களுக்கு தான் பாஜக தலைவர்கள் தடை கோருகின்றனர். இந்த பன்ச் டயலாக்குகள் சரியா, தவறா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.