Tamil Cinema News | சினிமா செய்திகள்
களைகட்டும் விஜய் அவார்ட்ஸ்… சுழன்றடிக்கும் சர்ச்சைகள்
தமிழின் பிரபலமான டிவி சேனலான ஸ்டார் விஜய் சேனல் கடந்த 2006-ம் ஆண்டு முதல் விஜய் அவார்ட்ஸை வழங்கி வருகிறது. தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படுபவர்களைக் கௌரவப்படுத்தும் விஜய் அவார்ட்ஸ் கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் ஒரு சில காரணங்களால் வழங்கப்படாமல் இருந்து வந்தது.
அந்த குறையைப் போக்கும் வகையில் 10-வது ஆண்டாக இந்த ஆண்டு விஜய் அவார்ட்ஸ் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக ரசிகர்களின் வாக்கெடுப்பு சோஷியல் மீடியாவில் தொடங்கியிருக்கிறது. விஜய் டிவி விருதுகள் வழங்கும் விழாக்களில் விருதுக்குத் தேர்வாகும் படங்களால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கம். சேனல் தரப்பில் நியமிக்கப்படும் ஜூரிக்கள் தேர்ந்தெடுக்கும் விருதுகளுடன், ரசிகர்கள் வாக்களித்துத் தேர்வு செய்யும் விருதுகள் பேவரைட் என்ற அடைமொழியுடன் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தாண்டுக்கான நாமினேஷன் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில், சிறந்த நடிகர், நடிகை, சிறந்த படம், பேவரைட் இயக்குநர் என 4 பிரிவுகளில் அஜித்தின் விவேகம் படம் நாமினேட் ஆகியிருக்கிறது. மேலும், சிறந்த மற்றும் பேவரைட் பாடல்கள் வரிசையில் இயக்குநர் ராம் இயக்கிய தரமணி படத்தின் பாடல்கள் ஒன்று கூட இடம்பெறவில்லை. விவேகம் படத்தின் 4 நாமினேஷன்களில், பேவரைட் இயக்குநர் நாமினேஷன் குறித்து பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
விவேகம் படம் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெறாத நிலையில், அந்த படத்தின் இயக்குநரை பேவரைட் இயக்குநராக நாமினேட் செய்ததற்கு என்ன காரணம் என்று நெட்டிசன்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கி விட்டனர். அதேபோல், விருது விழா மேடை ஒன்றில் விஜய் டிவியை இயக்குநர் ராம் விமர்சனம் செய்ததாலேயே, அவரது தரமணி படப் பாடல்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.
