Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் அவார்ட்ஸின் அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்த டிடி…
இரண்டு வருடங்கள் கழித்து நடைபெற இருக்கும் புகழ்பெற்ற விஜய் அவார்ட்ஸின் அதிகாரப்பூர்வ மறு தேதியை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் பிரபலங்களுக்கு விருதுகள் தான் அவர்களின் நடிப்புக்கு கிடைக்கும் தீனி. இதனால் பல நிறுவனங்களும் வருடா வருடம் விருது கொடுத்து அவர்களை சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் விஜயும், சினிமா நட்சத்திரங்களுக்கு பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வந்தது. 9 வருடமாக கோலகலாமாக நடைபெற்று வந்த விருது விழா கடந்த இரண்டு வருடமாக நடைபெறாமல் இருந்தது. இதில் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற சில சர்ச்சைகள் காரணமாக சொல்லப்பட்டது. அதிலும் கடைசி வருட விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் யாரும் கலந்து கொள்ளாமல் இருந்தது நிகழ்ச்சியின் தரத்தை குறைத்ததாக கருதிய தொலைக்காட்சி, இரண்டு வருடம் இடைவெளி விட்டது. தொடர்ந்து, தற்போது பிரம்மாண்டமாக 10வது வருட விருது விழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கடந்த 26ம் தேதி நடைபெற இருந்த விழா அன்றைய தினம் ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நிகழ்ச்சி தரப்பு அறிவித்தது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செய்யவே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தது. ஆனால், பிரபல நட்சத்திரங்களும், நடிகர் சங்கமும் தூத்துக்குடி வன்முறை நேரத்தில் விருது விழாவில் கலந்து கொண்டால் மக்கள் மனதில் தவறான எண்ணம் ஏற்பட்டு விடும் என தவிர்த்த காரணத்தாலே தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரத்து செய்திருப்பதாகவும் ஒரு தகவல்கள் றெக்கை கட்டியது.
இந்நிலையில், விஜய் அவார்ட்ஸின் மறு தேதி ஜூன் 3ந் தேதி என விஜய் குழுமத்தின் பிரபல தொகுப்பாளினி டிடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார். இதுகுறித்த ஒரு ப்ரத்யேக புகைப்படத்தையும் அவர் பகிர்ந்து இருக்கிறார். இதனால் இந்த வார இறுதியில் நிகழ்ச்சி பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் நடக்கும் என தெரிகிறது.
