Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் அவார்ட்ஸ் விருது இல்லை எருது : இயக்குனர் அமீர்
பிரபல தொலைக்காட்சியில் வருடாவருடம் நடத்தப்படும் விஜய் அவார்ட்ஸை விருது இல்லை எருது என காட்டமாக இயக்குனர் அமீர் தெரிவித்து இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை இயக்குனர் பாலாவின் சேது படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய அமீர், தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து, ராம், பருத்திவீரன உள்ளிட்ட படங்கள் இயக்கி கோலிவுட்டில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தார். மனதில் பட்டதை யோசிக்காமல் கூறி விடும் அமீர், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவது வழக்கமாகி இருக்கிறது. அரசியலில் ஆர்வம் காட்டி வருவதால், தற்போது தமிழ் சினிமாவில் இருந்து சற்று தள்ளி இருக்கிறார். தற்போது, காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் ஆகிய சமூக பிரச்சனைகளில் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த ரஜினியை கடுமையாக சாடிய அமீர், பெரும் சர்ச்சைக்குள் சிக்கினார்.
இந்நிலையில், மீண்டும் விஜய் அவார்ட்ஸை விமர்சித்து சலசலப்பை ஏற்படுத்து இருக்கிறார். இதுகுறித்து, தனது சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், படத்தை இயக்கும் போது எனக்கு விருது வேண்டும் என என்றுமே யோசிக்கமாட்டேன். நான் சாதாரணமாக தான் படம் எடுக்கிறேன். ஆனால், தற்போதைய சினிமா உலகில் விருதுகள் தான் ஒரு படத்தின் அங்கீகாரம் என்ற அடையாளம் உருவாகி இருக்கிறது. இதை சிலர் பயன்படுத்தி கொண்டு ஒரு தலை பட்சமாக விருது விழாக்களை நடத்தி வருகிறார்கள்.
அதிலும், குறிப்பாக விஜய் அவார்ட்ஸ் தன்னை ஆகா ஓஹோ புகழ்ந்து பேசுபவர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறது. அதே பாணியில் தான் என்னையும் அணுகினார்கள். அதெல்லாம் என்னால் முடியாது. நீங்க தவறான ஆளை தேர்ந்தெடுத்து விட்டீர்களாம் என கூறி விட்டேன் என பேசியுள்ளார். மேலும் விஜய் அவார்ட்ஸை என்பது விருது இல்லை எருது எனவும் கலாய்த்துள்ளார். விஜய் அவார்ட்ஸ் நடக்கும் இந்த நேரத்தில் அமீர் இந்த கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.