லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க புதிய படத்துக்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருக்கிறது.

‘துப்பாக்கி’ மற்றும் ‘கத்தி’ ஆகிய படங்கள் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றது விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ். இந்தியில் அக்‌ஷய்குமார் நடிப்பில் ‘துப்பாக்கி’ திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. அதே போன்று, சிரஞ்சீவி மீண்டும் தெலுங்கில் ‘கத்தி’ ரீமேக் மூலமாக திரையுலகுக்கு திரும்பியுள்ளார்.

தற்போது இக்கூட்டணி மீண்டும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே தயாரிக்க முன்வந்துள்ளது.

இப்படம் குறித்து லைக்கா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் “இப்படம் தற்போது மிகவும் தொடக்கநிலையில் உள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் மட்டும் உறுதிசெய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் தரப்பில் விசாரித்த போது, “இருவரும் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்போதும் இருவரும் பேசி வருகிறார்கள்” என்று தெரிவித்தார்கள்.