Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜயை மட்டுமல்ல அஜித்தையும் எதிர்த்தவர் அன்புமணி ராமதாஸ்… எந்த படத்தில் தெரியுமா?

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சர்கார் படத்தை மட்டுமல்ல இதற்கு முன்னதாக அஜித்தின் படத்தையும் எதிர்த்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் புதுப்படங்கள் சர்ச்சையை சந்திக்காமல் வெளிவருவது தற்போது அரிதாகி இருக்கிறது. எதற்கு எடுத்தாலும் போராட்டம் அல்லது நீதிமன்றத்தில் மனு போட கிளம்பி விடுகிறார்கள். இது முன்னணி நடிகர்களின் படத்துக்கு அதிகமாக நடைபெற்று வருகிறது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கு இந்தியாவின் பிரதான கட்சி ஒன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தும் படக்குழு அதை கண்டுக்கொள்ளவில்லை. நீதிமன்ற படியேறினாலும் தணிக்கை செய்த படத்தை எல்லாம் தடை செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த எதிர்ப்புகள் படத்திற்கு தான் செம சாதகமாக அமைந்தது. தேசிய அளவில் படத்திற்கு ரீச் கிடைத்தது. இந்த பாணியில் விஜயின் சர்கார் படத்திற்கும் ஒரு புது சர்ச்சை கிளம்பி இருக்கிறது.
சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயின் பிறந்தநாளுக்கு முந்தைய தினத்தில் படக்குழு வெளியிட்டது. இதை ரசிகர்கள் ஒரு புறம் வைரலாக்கி வந்தனர். ஆனால், விஜய் படம் என்றாலே பிரச்சனை வருமே என பலர் சிந்தித்து கொண்டிருக்க, இந்த முறை அந்த வாய்ப்பை கையில் எடுத்தவர் அன்புமணி ராமதாஸ். போஸ்டரில் விஜய் வாயில் சிகரெட் புகைத்து கொண்டு இருந்தார். விஜய் தன் ரசிகர்களை தவறான வழிக்கு அழைத்து செல்வதாக கண்டனம் தெரிவித்தார். இனி அப்படி நடிக்க மாட்டேன் என விஜய் அறிவித்த செய்தித்தாள் காப்பியையும் வெளியிட்டது வைரலாக பரவியது.
இந்நிலையில், விஜயை மட்டுமல்ல அன்புமணி ராமதாஸ் இதற்கு முன்னர் இதே பிரச்சனையில் அஜித்தையும் வம்புக்கு இழுத்து இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் புகைப்பிடிப்பது போல போஸ் கொடுத்து இருந்தார். அதற்கு அன்புமணி எதிர் குரல் கொடுத்து இருக்கிறார். மேலும் பிரபல தியேட்டர் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்த பேனரில், அஜித்தின் முகம் மேல் புகைபிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். உயிரை பறிக்கும் என்ற வாசகங்களை அடங்கிய போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.
