விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்க்கச் சென்ற தளபதி ரசிகர்.. எதிர்பாராத விதமாக நடந்த விபத்து

பொதுவாகவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தல அஜித், தளபதி விஜய்,  உள்ளிட்டோர் திரைப்படங்களுக்கு பாலாபிஷேகம், கட் அவுட்டுகள், பேனர்கள், உள்ளிட்டவை வைத்து ரசிகர்கள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துவர். தங்களுடைய வெற்றி நாயகர்களுக்காக இதுபோன்று ரசிகர்கள் செய்யும்போது பல விபத்துகளும் தமிழகத்தில் நடைபெற்று உள்ளது. அந்த வகையில் தற்போது பீஸ்ட் படத்தை காண்பதற்காக காரில் வந்த ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தற்போது பேசும்பொருளாக மாறியுள்ளது. இது குறித்து ஆவின் பால் முகவர் சங்க தலைவர் பொன்னுசாமி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திரையரங்குகளில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. நடிகை பூஜா ஹெக்டே, யோகிபாபு, வி.டி.வி கணேஷ், செல்வராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் ஆக்ஷன் மற்றும் காமெடியை கலந்து கமர்சியல் திரைப்படமாக வெளிவந்துள்ளது. அனிருத் இசையில் திரையரங்கமே அதிர்ந்த நிலையில் பல கலவையான விமர்சனங்களை பீஸ்ட் திரைப்படம் பெற்றது. ஏற்கனவே இது போன்ற கதைகள் தமிழ் சினிமாவில் உள்ளதால் நடிகர் விஜய்க்கு இணையாக பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் இயக்கவில்லை என விஜய்யின் ரசிகர்களும் விமர்சகர்களும் தெரிவித்து வருகின்றனர்

இருந்தாலும் வசூல் ரீதியாக ஒரே நாளில் 88 கோடி வரை வசூல் செய்த நிலையில் விஜய் ரசிகர்கள் விஜய்யை பார்ப்பதற்காகவே ஆவலோடு திரையரங்குகளில் ஓடிவந்தனர். அந்தவகையில் நடிகர் விஜயின் தீவிர ரசிகரான இளைஞர் ஒருவர் தன் நண்பர்களோடு பீஸ்ட் படத்தை பார்க்க வந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து பேசிய ஆவின் பால் முகவர் சங்கத் தலைவர் பொன்னுசாமி, பீஸ்ட் படத்தை பார்ப்பதற்காக கோவையை சேர்ந்த கௌஷிக் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் காரில் திரையரங்கிற்கு வந்த நிலையில், திடீரென விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

மேலும் அவருடன் வந்த நண்பர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து விஜயின் தரப்பிலிருந்து எந்த ஒரு ஆறுதல் அறிக்கையோ கடிதமும் வரவில்லை. மேலும் இந்த நிகழ்வு குறித்து நடிகர் விஜய்க்கு தெரியுமா, தெரியாதா என்று கூட தனக்கு தெரியவில்லை என்று பொன்னுசாமி தெரிவித்தார். மேலும் தனக்காக ரசிகர்கள் உயிர் இழக்கும் வரை சென்ற நிலையில் கௌஷிக்கின் குடும்பத்தாருக்கு தகுந்த உதவியையும் ஆறுதலான வார்த்தையும் நடிகர் விஜய் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என பொன்னுசாமி தெரிவித்தார்.

அது மட்டுமின்றி நடிகர் விஜயின் ரசிகர்கள் அவரின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதால் பால் அதிகமாக வீணாகும் நிலையில், இதுகுறித்து நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்றார். ஆனால் ஏற்கனவே நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு தன் கட்டவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டாம் என்ற கோரிக்கையை விழா மேடை ஒன்றில் வைத்திருந்தார். இருந்தாலும் ரசிகர்கள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துவதற்காக இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு விஜய்யின் தலைவா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், மனமுடைந்த கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோலவே விஜய்யின் புலி படத்திற்காக சுவற்றில் போஸ்டரை ஓட்டுவதற்காக சென்ற இரண்டு விஜய் ரசிகர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இந்த நிகழ்வுக்காக நடிகர் விஜய் அவர்களது குடும்பங்களின் இல்லத்திற்கு சென்று ஆறுதலையும்,உதவியையும் செய்த நிலையில், தற்போது விபத்தில் இறந்த கௌஷிக்கின் குடும்பத்தாருக்கும் விஜய் தரப்பில் இருந்து உதவிகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்