Tamil Cinema News | சினிமா செய்திகள்
’தளபதி’ விஜயுடன் கைகோர்க்கிறாரா விக்னேஷ் சிவன்?. வைரல் தகவல்

போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ்சிவன், இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்துவிட்டார். பெரிய இடைவெளிக்குப் பின்னர் விஜய் சேதுபதி – நயன்தாரா கூட்டணியில் இவர் இயக்கிய நானும் ரௌடிதான் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பட்டையைக் கிளப்பியது.
அடுத்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட விக்னேஷ் சிவன், சூர்யா – கீர்த்தி சுரேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளத்தின் துணையுடன் எடுத்து முடிந்த தானாசேர்ந்த கூட்டம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக 1980-களில் நடக்கும் கதையை மையமாகக் கொண்ட அந்த படத்தில் அனிருத் இசையில் வெளியான பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்த படத்தின் பாடல்கள் ஸ்ட்ரீமிங்குக்காக இசையமைப்பாளர் அனிருத்துக்கு பிளாட்டினம் ப்ளே பட்டனே யூ ட்யூப் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது. அந்த அளவுக்கு பாடல்கள் வரவேற்பைப் பெற்றன.
இந்தநிலையில், தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் விக்னேஷ் சிவன் இப்போ ரொம்ப பிஸியாகி இருக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்ட படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது. ஆனால், ஸ்கிரிப்ட் ரெடி பண்ண அவர் அவகாசம் கேட்டதால், சிவகார்த்திகேயன் – ஸ்டூடியோ கிரீன் இணையும் படத்தை இயக்கும் வாய்ப்பு ராஜேஷ்.எம் கைக்கு சென்றது. இதுகுறித்து ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ள ராஜேஷ், இந்த படத்தை விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது. அவர் டைம் கேட்டதால், திரைக்கதையுடன் தயாராக இருந்த நான் சிவாவை இயக்குகிறேன் என்று சொல்லியிருந்தார்.
இந்தநிலையில், ’தளபதி’ விஜயுடன் சந்தித்து நீண்ட நேரம் விக்னேஷ் சிவன் பேசியதாகக் கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அவர்கள் சந்திப்பை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர்களது சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அப்போது விஜய்க்கென பிரத்யேகமாக தான் உருவாக்கியிருந்த திரைக்கதையை அவரிடம் விக்னேஷ் சிவன் சொல்லியிருக்கிறார் என்கிறார் விவரமறிந்தவர்கள். சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் அந்த படத்துக்குப் பிறகு விஜயின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற மில்லியன் டாலர் கேள்வி கோலிவுட்டில் வலம் வருகிறது. அந்த ரேஸில் தற்போது, மோகன் ராஜா, `சதுரங்க வேட்டை’ எச். வினோத் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரது பெயர்கள் உள்ளன. ஆனால், விக்னேஷ் சிவன் அந்த வாய்ப்பைப் பெறுவார் என்கிறார்கள்.
