தனுஷும் ஜி.வி.பிரகாஷும் ஒரு காலத்தில் நண்பர்கள். அவர் நடித்த ஆடுகளம் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்தான் மியூசிக். படம் மட்டுமல்ல, பாட்டும் பிய்த்துக் கொண்டு போனது. திரும்பிய இடமெல்லாம் ஆடுகளம் பாட்டுதான் பட்டைய கிளப்பியது. அப்படியாப்பட்ட நண்பர்களுக்கு நடுவில் என்ன கருமம் வந்ததோ? இவர் அவரை விமர்சிக்க, அவர் இவரை விமர்சிக்க, ஜி.வி.க்கு பதிலாக அனிருத்தை உள்ளே கொண்டு வந்தார் தனுஷ். அதற்கப்புறம் தனுஷை வெளிப்படையாகவே எதிர்க்க ஆரம்பித்தார் ஜி.வி.

கட்…! தனுஷ் ஜெயலலிதா என்றால், அவருக்கு ஓ.பன்னீர் செல்வமாக இருந்தவர் வெற்றிமாறன். இவரது படங்களும் கதையும் தனுஷ் என்கிற மூன்றெழுத்தை நம்பியே வந்திருக்கின்றன. அட… வெற்றிமாறன் ஒரு படம் தயாரித்தார். அதற்குக் கூட தனுஷ்தான் கை கொடுத்திருந்தார். இப்படி வெற்றிமாறனின் சுவாசமாகவே இருந்த தனுஷ் இப்போதென்னவோ அவரை சரியாக கண்டு கொள்வதில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

மேலும் வெற்றிமாறனும் ஜி.வி.யும் தனியாக சந்தித்து பல மணி நேரம் உரையாடினார்களாம். அப்போது ஜி.வியின் கால்ஷீட் கேட்கப்பட்டதாகவும், உங்களுக்கு இல்லாத கால்ஷீட்டா என்று ஜி.வி.பிரகாஷ் கரைந்ததாகவும் தகவல்கள் கசிகின்றன.

இந்தப்படத்தை வெற்றிமாறன் தயாரிப்பார் என்றும், அவரது அசிஸ்டென்டுகளில் யாரோ ஒருவர் இயக்குவார் என்றும் இப்போதைக்கு பேச்சு.

தனுஷின் நெற்றிக்கண் வெப்பம், கூலிங் கிளாஸ்சை தாண்டி கொதிக்கும் போலிருக்கே?