விவசாயக் கடன்களை ரத்து செய்வது தொடர்பாக மாநில அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சிக்கு நிவாரணமாக மத்திய அரசு 2,000 கோடி ரூபாய் ஒதுக்கிவிட்டதால் இனிமேல் மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அனைத்து மாநிலங்களுக்கும் வேளாண் கடனை ரத்து செய்ய வேண்டும் என கோரினால் மற்ற திட்டங்களுக்கான நிதிக்கு மத்திய அரசு என்ன செய்யும்? என கேள்வியெழுப்பினார்.

கடந்த 3 ஆண்டுகளாகத்தான் மத்தியில் பாஜக ஆட்சி இருக்கிறது; அதற்கு முன் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி விவசாயிகளின் நலனுக்காக என்ன செய்தது என கேள்வியெழுப்பினார்.

அதிமுக மற்றும் பாஜகவை விடுத்து திமுக கூட்டிய கூட்டம் எப்படி அனைத்துக் கட்சிக் கூட்டமாக இருக்க முடியும்? எனவும் கேள்வியெழுப்பினார்.

தமிழகத்தில் நிலையான ஆட்சி நீடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து நிலையான ஆட்சியை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.