சேலம்,

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக காரில் கடத்தி சென்ற சேலம் சின்னதிருப்பதி கணபதி நகரை சேர்ந்த முருகேசன் (வயது 41), அவருடைய மனைவி நிர்மலா (38), கார் டிரைவர் வெங்கடாசலம் ஆகிய 3 பேரை கேரள போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்துக்கு புதிய ரூ.500, ரூ.2000 கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து கேரள போலீசார் அவர்களை சேலத்திற்கு அழைத்து வந்து சேலம் சின்னதிருப்பதியில் உள்ள முருகேசன் வீட்டில் கள்ளநோட்டுகள் அச்சடிப்பதற்காக வைத்திருந்த எந்திரங்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.

பரபரப்பு தகவல்கள்

இது தொடர்பாக கேரள போலீசாரும், சேலம் மாநகர போலீசாரும் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:– முருகேசன் சேலம் அஸ்தம்பட்டி உழவர்சந்தை அருகே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அங்கு கணவன், மனைவி 2 பேரும் காய்கறிகள் விற்பனை செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கள்ளரூபாய் நோட்டு அச்சடிக்கும் கும்பலுடன் முருகேசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கும்பலிடம் இருந்து ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரத்தை முருகேசன் வாங்கினார். இதுகுறித்து யாருக்கும் தெரியாமல் அவர்கள் பார்த்துக்கொண்டனர்.

சந்தேகம் வராமல் இருப்பதற்காக அவர்கள் தொடர்ந்து பகல் நேரத்தில் காய்கறி கடையை நடத்தி வந்தனர். இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் கள்ளநோட்டுகளை வீட்டில் அச்சடித்துள்ளனர். இந்த நோட்டுகளை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று புரோக்கர் மூலம் கொடுத்து மாற்றியும், புழக்கத்திலும் விட்டுள்ளனர்.

இதற்காக அவர்கள் 3 நாட்கள் வெளிமாநிலங்களில் தங்கி விட்டு சேலம் திரும்பி விடுவார்கள். கள்ளநோட்டுகள் அச்சடிப்பதற்கான தாள்களை திருச்சூரில் இருந்து வாங்கி வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தநிலையில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் அவர்கள் சிறிது காலம் கள்ள நோட்டு அடிக்க முடியாமல் இருந்தனர். பின்னர் யார் மூலமோ புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரத்தை வாங்கி, மீண்டும் கள்ள நோட்டு அச்சடித்தனர்.

வீடுகள், சொகுசு கார்கள்

இந்த தொழிலுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக உறவினர்கள் யாரிடம் அவர்கள் அதிகம் பேசுவது கிடையாது. அதையும் மீறி உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் வீட்டுக்கு வந்தால், அவர்களை வாசலில் நிறுத்தி பேசி விட்டு முருகேசன் தம்பதியினர் திருப்பி அனுப்பி விடுவார்கள்.

கள்ளநோட்டு அச்சடித்து அதை மாற்றியதில் கிடைத்த பணத்தின் மூலம் வீடுகள் மற்றும் சொகுசு கார்கள் வாங்கியுள்ளனர். அடிக்கடி காரில் செல்லும்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கேட்டால், வியாபாரம் தொடர்பாக வெளியூருக்கு செல்லவேண்டி உள்ளது என கூறி நம்ப வைத்துள்ளனர். இதற்கிடையில் வீட்டில் ஏற்கனவே அச்சடித்து வைத்திருந்த ரூ.5 லட்சம் கள்ள நோட்டுகளை கேரளாவில் உள்ள ஒரு புரோக்கரிடம் கொடுத்து, கள்ள நோட்டு அடிப்பதற்கான தாள்களை பெறுவதற்காக காரில் சென்றபோது கேரள போலீசாரிடம் மாட்டிக்கொண்டது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

தீவிர விசாரணை

இதையடுத்து முருகேசன் தம்பதியினருக்கு கள்ளநோட்டு அச்சடிக்கும் எந்திரம் கொடுத்தது யார்?, அந்த கும்பலுடன் இவர்களுக்கு எவ்வாறு பழக்கம் ஏற்பட்டது? இதில் யார்? யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? கள்ளநோட்டுகள் அச்சடிப்பதற்கான தாள்களை திருச்சூரில் யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பது குறித்து கேரள மற்றும் சேலம் மாநகர போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.