அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிப்பில் அனிருத் இசையமைப்பில் சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் வெளிவந்த படம் வேதாளம். கடந்த ஆண்டு இதே சமயத்தில் கொட்டித் தீர்த்த பெருமழைக்கு நடுவிலும் இந்தப் படம் வசூலை அள்ளியது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

அண்ணன், தங்கை பாசக் கதையாக அமைந்த இந்தப் படம் அஜித் ரசிகர்களை மட்டும் கவராமல் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததே படத்தின் மிகப் பெரும் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. இப்படத்தின் டீசர் வெளியான போதே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்றபடி மிக விரைவாக மில்லியன் பார்வை, 1 லட்சம் லைக்ஸ் என தமிழ்த் திரைப்பட டீசர் வரலாற்றில் முதல் முறையாக சாதனை புரிந்தது.

சுமார் 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் 100 கோடி ரூபாய் வரையில் வசூலைப் பெற்றதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவித்தார்கள். அஜித்தை எந்த மாதிரி அவரது ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்களோ அப்படியே அவரைக் காண்பித்து ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார் இயக்குனர் சிவா.

இன்றுடன் (நவம்பர் 10) இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது.

இதை முன்னிட்டு இன்று சென்னை, பாண்டிச்சேரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூர், கண்ணியாகுமரி, திண்டுக்கல் போன்ற பல ஊர்களில் வேதாளம் ரீ ரிலிஸ் ஆகியுள்ளது. நேற்றே சென்னை வெற்றி திரையரங்கில் ஒரு ஷோ போடப்பட்டது. இதை அஜித் ரசிகர்கள் முதல்நாள் முதல் ஷோ போல கொண்டாடியுள்ளனர்.

ரசிகர் மன்றங்களே இல்லாத சூழ்நிலையில் அஜித்துக்கு இன்னமும் இப்படி ஒரு ஓபனிங்கும், ரசிகர்கள் கூட்டமும் இருப்பது திரையுலகத்தில் பலருக்கும் பொறாமையாகவே இருக்கிறது.