விநியோகஸ்தர்களின் வயிற்றில் அடித்த வலிமை.. கோடிக்கணக்கில் நஷ்டம், யாா் பொறுப்பு?

இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த மாதம் வெளியான படம் தான் வலிமை. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மனம் கவராமல் போய்விட்டது. இருப்பினும் பல திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக ஓடியதாக அவரது ரசிகர்கள் இந்த படத்தை தொடர்ந்து கொண்டாடி வந்தனர்.படம் வெளியான பிறகு படத்தின் வசூல் 100 கோடி 150 கோடி என்று இஷ்டத்திற்கு இணையதளத்தில் பல தகவல்கள் கசிய ஆரம்பித்தது. உண்மையில் இந்த படத்தின் பட்ஜெட் எவ்வளவு, எவ்வளவு தொகை இந்த படம் வசூல் செய்திருக்கிறது தயாரிப்பாளர்கள் அடைந்த லாபம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முதலில் வலிமை படத்திற்கு 90 கோடி ரூபாய் பட்ஜெட் ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் போனிகபூர் 45 கோடி ஜீ ஸ்டூடியோ 45 கோடி என்று பிரித்துக் கொள்ளப்பட்டது. ஆனால் கரோனா தொற்றின் காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம் செய்யப்பட்டது . இதனால் 90 கோடியாக இருந்த பட்ஜெட் 100 கோடியாக மாறியது. இதில் ஜீ ஸ்டுடியோ கொஞ்சம் கொஞ்சமாக தனது 50 கோடியை முதலீடு செய்து விட்டது . மறுபுறம் போனிகபூர் தனது 50 கோடியை முதலீடு செய்தார். முதலில் இந்த படத்தின் பப்ளிசிட்டி செலவிற்காக 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோக படத்தின் விநியோகம் எல்லாம் சேர்த்து படத்தின் மொத்த பட்ஜெட் ஆக 115 கோடி ரூபாய் 25 லட்சமாக படப்பிடிப்பு முடியும் வரை செலவாகியதாக சொல்லப்பட்டிருக்கிறது. இதில் இந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கு சம்பளமாக மட்டும் 60 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. நடிகர் அஜித் குமார் 50 கோடியும் , இயக்குனர் வினோத் 5 கோடியும், படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒரு கோடியே 50 லட்சம், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திகேயா 75 லட்சமும் படத்தின் ஹீரோயின் 50 லட்சமும் சம்பளமாக வாங்கி இருக்கின்றனர். படம் முடிந்த பிறகு தமிழக திரையரங்குகள் விநியோகஸ்தர்களுக்கு மட்டும் 58 கோடி ரூபாய்க்கு படம் வினியோகம் செய்யப்பட்டது. இது போக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையையும் டிஜிட்டல் உரிமையையும் ஹிந்தி டப்பிங் உரிமையையும் 60 கோடி ரூபாய் கொடுத்து ஜீ ஸ்டுடியோ வாங்கி விட்டது. இதனால் இந்த படம் மொத்தமாக சம்பாதித்த லாபம் 141 கோடி ரூபாய். ஆக இந்த படத்தால் தயாரிப்பாளர்கள் அடைந்த லாபம் 25 கோடியே 75 லட்சம் ரூபாய் .

900 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது ஆயிரம் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது என்று பல வதந்திகள் கிளம்பியது. ஆனால் உண்மையில் இந்த படம் தமிழகத்தில் 740 தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி இருந்தது. முதல் ஐந்து நாட்களில் 65 கோடியே 50 லட்சம் மட்டுமே வலிமை திரைப்படம் வசூல் செய்திருந்தது . ஆனால் தமிழகத்தில் முதல் நாள் வசூல் 35 கோடி ரூபாய், 100 கோடி ரூபாய் என்று இஷ்டத்திற்கு அவரது ரசிகர்கள் இணையதளங்களில் அளந்து விட்டுக் கொண்டிருந்தனர். இப்படி இரண்டு வாரங்களில் 81 கோடியாகவும் மொத்தமாக தமிழகத்தில் இந்தப் படம் வசூல் செய்தது 90 கோடி ரூபாயாகவும் இருக்கிறது. இந்திய அளவில் 110 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

இதனால் திரையரங்க விநியோகஸ்தர்களுக்கு கிடைத்த பங்கு 50 கோடி மட்டுமே. இந்த 50 கோடி வருவாய் மட்டுமே திரையரங்க விநியோகஸ்தர்களுக்கு கிடைத்தது. இதிலும் சென்னை மற்றும் செங்கல்பட்டு சுற்றியுள்ள திரையரங்குகள் மட்டுமே போட்ட பணத்தை திரும்ப எடுக்க முடிந்தது. திருச்சி, சேலம்,திருநெல்வேலி போன்ற திரையரங்கு விநியோகஸ்தர்கள் 8 கோடி ரூபாய் வரை இந்த படத்தின் மூலம் நஷ்டம் அடைந்து இருக்கின்றனர். மேலும் இந்த படத்தால் கேரளா கர்நாடகா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இந்த படத்தை வாங்கி விநியோகம் செய்த விநியோகஸ்தர்களும் நஷ்டம் அடைந்திருக்கின்றனர்.

மொத்தத்தில் இந்த படம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஆகவும் இந்த படத்தை வாங்கி விநியோகம் செய்த விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தையும் கொடுத்திருக்கிறது. குறிப்பாக இந்த படத்தின் ஓவர்சீஸ் உரிமையை வாங்கியவருக்கு மூன்று கோடி ரூபாய் வரை நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. இந்த படம் தமிழகத்தில் வசூலில் முன்னணியாக இருக்கக்கூடிய விஜய்யை விட அதிக வசூல் செய்து இந்த வலிமை திரைப்படத்தின் மூலம் அந்த சாதனைகளை அஜித் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் தற்போது இந்த வலிமை திரைப்படம் அவர்களை ஏமாற்றி விட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்