பணம் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும், யார் டைரக்ஷனில் வேண்டுமானாலும் நடிக்க வைத்துவிடலாம் என்கிற பாட்சா, கோடம்பாக்கத்தில் பலிக்கவே பலிக்காது. “கதை நல்லாயிருக்கு. கம்பெனி நல்லாயிருக்கு. ஆனால் அந்த டைரக்டரை கண்டா எனக்கு ஒடம்பெல்லாம் எரியுதே” என்று ஒவ்வாமை வியாதியால் நல்ல படங்களை இழந்த எத்தனையோ ஹீரோக்கள் இங்கேயுண்டு.

ஆனால் நல்ல பேரு வரணும். அதற்காக எந்த டார்ச்சரையும் கூட பொறுத்துக் கொள்ளலாம் என்கிற நிலைக்கு உதயநிதி வந்திருப்பதை ஆச்சர்யத்தோடு கவனிக்க ஆரம்பித்திருக்கிறது இன்டஸ்ட்ரி. தனது முதல் படத்தின் தாமதத்திற்கான காரணத்தை ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ பட நேரத்தில் சொன்ன உதயநிதி, “நான் பல நாட்கள் ஷுட்டிங்கே போனதில்ல. அதிகாலை ஷாட்டெல்லாம் நமக்கு ஆகவே ஆகாது. எனக்காக நிறைய அட்ஜஸ்ட் பண்ணிதான் இந்த படத்தை இயக்கினார் ராஜேஷ்” என்று கூறியிருந்தார்.

அப்படிப்பட்டவர் எப்படி மைனா மற்றும் கும்கி புகழ் பிரபுசாலமன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்? அதுவும் இந்தப்படம் நடக்கப் போவது முழுக்க முழுக்க பாலைவனத்தில்தானாம். ஏ.சி மிஷினை சிம்லா சீசனுக்கு ஒப்பாக வைத்துக் கொண்டு போகிற இடமெல்லாம் ஜில்லென இருக்கும் உதயநிதி, பிரபுசாலமன் போட்டு வறுத்து எடுப்பாரே… எப்படி பொறுத்துக் கொள்ளப் போகிறாராம்?

ஊர்ல அம்புட்டு பேரும் ஒரு தேசிய விருதை வாங்கி வைத்துக் கொண்டு, ‘விருது பெற்ற நடிகர்’னு பந்தா காட்றானுங்க. நமக்கு மட்டும் ஆசையிருக்காதா என்று நினைத்திருக்கலாம். விருதுக்கு தகுதியான இந்த கதையில் முழு மனதோடு நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.