Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் கண் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் பல்வாள் தேவன்…
நடிகர் ராணா ரகுபதிக்கு மீண்டும் கண்ணில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனையால், அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், இந்தியிலும் பிஸியாக இருப்பவர் ராணா டகுபதி. 2010ம் ஆண்டு லீடர் படத்தின் மூலம் தெலுங்கில் நாயகனாக அறிமுகமானார். பல படங்களில் நடித்திருந்தாலும், பாகுபலி படம் தான் இவரின் திரை வாழ்வில் பெரிய மைல்கல்லாக அமைந்தது. நாயகன் பாகுபலியாக நடித்த பிரபாஸை போல பல்வாள் தேவன் கதாபாத்திரம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது. பாகுபலி படமும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. முன்னதாக, ஆரம்பம் படத்திலும், இஞ்சி இடுப்பழகி படத்தில் சிறப்பு வேடத்தில் மட்டுமே ராணா நடித்திருந்தார். இதை தொடர்ந்து, முழு நீள தமிழ் படத்தில் நடித்தது என்றால் பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான பெங்களூர் நாட்கள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்து வருகிறார்.
ராணாவிற்கு சிறு வயது முதலே வலது கண்ணில் பார்வை இல்லாமல் இருந்து வந்திருக்கிறது. இதனால் இடது கண்ணால் மட்டுமே பார்த்து கொண்டிருந்து இருக்கிறார். அதை தொடர்ந்து, யாரோ செய்த கண் தானத்தால், 10 வருடத்திற்கு முன்னரே ராணாவிற்கு வலது கண்ணில் பார்வை கிடைத்ததாம். இதை ஒரு பேட்டியில் ராணா தெரிவிக்க அனைவரிடம் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்நிலையில், மீண்டும் அந்த கண்ணில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதால் அமெரிக்கா செல்ல இருக்கிறார் ராணா. அங்கு, மீண்டும் வலது கண்ணில் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இத்தகவலை ராணாவின் தந்தை உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆனால், சிகிச்சையை தொடங்க அவரின் அதிகப்படியான ரத்த அழுத்தம் தடையாக இருப்பதால், அது சீராகும் வரை மருத்துவக் குழு காத்திருக்கிறது. இதை தொடர்ந்து, ஆபிரேஷனுக்கான நாள் குறிக்கப்பட்டு ராணா அமெரிக்க செல்ல இருக்கிறார். அதையடுத்து, ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புகளுக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
