சென்னையில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதனமான முறையில் செயின் திருட்டில் ஈடுபட்டுள்ளார் பெண்மணி ஒருவர்.

சென்னை ஆவடி பகுதியில் விக்னேஷ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று வந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனக்கு 5 பவுன் அளவில் தங்கச் சங்கிலி வேண்டும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பத்து வகையான தங்கச் சங்கிலிகளை விக்னேஷ் எடுத்துக் காட்டியுள்ளார்.

தங்க செயின்களை கையில் வாங்கிய அந்த பெண்மணி, ஒவ்வொன்றாக போட்டுப் பார்க்கத் துவங்கியுள்ளார். பின்னர் தனக்கு இந்த மாடல்கள் பிடிக்கவில்லை எனவும் பின்னர் ஒரு நாள் நகை வாங்க வருவதாகவும் கூறி செயின்களை விக்னேஷிடம் கொடுத்துவிட்டு, உடனடியாக அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

அந்த பெண்ணிடம் அளித்த செயின்களை எண்ணிப் பார்த்த போது, அதில் 9 செயின்கள் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ், கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, அந்த பெண் ஒரு செயினை மட்டும் சேலைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்றது தெரிய வந்தது.

இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு அந்த பெண்மணியை தேடி வருகின்றனர்.