ரெட்ஜெயன்ட் மூவீஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி படங்களை தயாரிக்கத் தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் தன் முதல் தயாரிப்பாக, விஜய் நடித்த குருவி படத்தைத் தயாரித்தார். அதன் பிறகு சூர்யாவை வைத்து ஆதவன், ஏழாம் அறிவு ஆகிய படங்களையும் தயாரித்தவர் கமல்ஹாசனை வைத்து மன்மதன் அம்பு படத்தையும் தயாரித்தார்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹீரோவான பிறகு மற்ற ஹீரோக்களை வைத்து படம் தயாரிப்பதை குறைத்துக்கொண்டார் உதயநிதி. அவரது நடிப்பில் அண்மையில் வெளியான கெத்து படத்தை அடுத்து மனிதன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் உதயநிதி. அந்தப் படத்தை முடித்த பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு தன்னுடைய ரெட்ஜெயன்ட் மூவீஸ் பட நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான படத்தைத் தயாரிக்க உள்ளார் உதயநிதி. அவர் இதவரை தயாரித்த படங்களிலேயே அதிக செலவில் தயாரிக்கப்பட உள்ள படம் இந்தப் படம்தானாம்.

உதயநிதியின் இந்த பிரம்மாண்ட தயாரிப்பில் நடிக்க இருப்பவர் அஜித் குமார். வீரம் சிவா மற்றும் விஷ்ணுவர்தன் இயக்கும் படங்களை முடித்த கையோடு, உதயநிதியின் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.