சென்னை : சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் நேரடியாகத் தொடர்பு கிடைக்கிறது. தங்களைத் தொடரும் லட்சக் கணக்கானோர் மூலம் தங்கள் படங்களைப் பற்றிய நேரடி விமர்சனம், கருத்துக்கள் கிடைக்கிறது என பெரும்பாலான ‘செலிபிரட்டிகள்’ டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் அவர்களுடைய எதிர்பார்ப்புகளையும் மீறி எதிர்மறையான விமர்சனங்களும் கருத்துக்களும் வரும் போது அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. விமர்சனத்தை ஏற்க மறுப்பு தங்களைப் பற்றிய பாராட்டு மழைகளையும், தங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசும் கருத்துக்களையும் மட்டுமே அவர்கள் ரீ-டுவீட், ஷேர் செய்கிறார்கள். படத்தைப் பற்றிய நல்ல விதமான விமர்சனங்களைச் சொன்னால் கூட தற்போது ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். மாறாக விமர்சனம் செய்வதற்கு என்ன தகுதி இருக்கிறது என கேள்வி எழுப்புகிறார்கள்.சமூக வலைத்தளம் என்பது அரசியலில் நுழைவது போன்ற ஆபத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கு சமீப காலங்களில் நடைபெற்ற சில விஷயங்களே உதாரணம். ஜல்லிக்கட்டுப் போராட்ட சமயத்தில் த்ரிஷா, விஷால், ஆர்யா உள்ளிட்டோர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்கள். விஷால், அப்போது டுவிட்டரை விட்டுப் போனவர்தான் இன்னும் திரும்பவில்லை.

த்ரிஷா, சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்துவிட்டார். ஆர்யா, எப்படியோ சமாளித்துவிட்டார். சுசிலீக்ஸ்: சமீபத்தில் டுவிட்டரில் பின்னணிப் பாடகி சுசித்ரா பதிவிட்ட புகைப்படங்கள், செய்திகள் ‘சுசிலீக்ஸ்’ என்று அழைக்கப்படும் அளவிற்கு பரபரப்பானது.நேற்று அடுத்த பரபரப்பாக சீனியர் நடிகையான ராதிகா சரத்குமாருக்கும், டிவிட்டரில் இருக்கும் ஒருவருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. குளிர்பான குஸ்தி: ராதிகா குளிர்பான விளம்பரத்தில் நடித்ததைப் பற்றி அவர் கடந்த சில நாட்களாகவே கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவருடைய விமர்சனமும் எல்லை மீறிப் போக, அதற்கு ராதிகா அவருக்கு நேரடியாக அனுப்பிய மெசேஜ் என ஒரு செய்தியை அவருடன் மோதலில் ஈடுபட்டவர் வெளியிட, டுவிட்டர் வலைதளமே பரபரப்பாகிக் கிடக்கிறது. ‘ஆபாசத்தின் உச்சம்’ என்று சொல்லுமளவிற்கு வார்த்தை மோதல் நாறிக்கிடக்கிறது. இதைப்போன்று நடிகை குஷ்புவையும் ஒருவர் தரக்குறைவாக விமர்சிக்க, அதற்கு அவரும் அதே தொனியில் அவரின் குடும்பத்தை விமர்சித்து இருக்கிறார்.சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாததே இதுபோன்ற விமர்சனங்களுக்கு காரணம். நல்ல விஷயங்களுக்குப் பயன்படும் சமூக வலைத்தளங்கள் சிலரால் எது எதற்கோ பயன்படும் நிலை வந்துவிட்டது, உண்மைப் பயனாளர்களை வருத்தமடைய வைத்துள்ளது.