Tamil Cinema News | சினிமா செய்திகள்
த்ரிஷாவின் வெற்றிக்கு இதான் காரணம்.. புகழும் மக்கள் செல்வன்

த்ரிஷாவின் வெற்றிக்கு இதான் காரணம்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷாவிடம் இருந்து சில விஷயங்களை கற்று கொண்டதாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாகக் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜொலித்து வருபவர் த்ரிஷா. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமான த்ரிஷா இன்றும் அவருக்கு போட்டியாக இருக்கிறார். 1999ம் ஆண்டு மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்பட்ட த்ரிஷா முதலில் நடிக்க வரமாட்டேன் என்றே கூறினார். ஆனால், விதி அவரை ஜோடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அழைத்து சென்றது. பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் ஆதர்ச நாயகியாக இருந்து வருபவர். தொடர்ந்து, விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். பெரும்பாலும், நாயகனுக்கு ஜோடியாக மட்டுமே நடித்து வந்த த்ரிஷா, சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
ஆனால், நயனுக்கு கிடைத்த லக் என்னவோ த்ரிஷாவுக்கு சரியாக அமையவில்லை. நாயகி, மோகினி என அவர் நடிப்பில் வெளிவந்த சமீபத்திய படங்கள் எல்லாமே சொதப்பலாகி இருக்கிறது. இருந்தும், த்ரிஷாவின் கைவசம் சுந்தர் பாலு இயக்கத்தில் ‘கர்ஜனை’, ‘சதுரங்கவேட்டை 2’, ‘1818’, விஜய் சேதுபதியுடன் ‘96’ உள்ளிட்ட படங்கள் இருக்கிறது.
இதில், 96 படத்தில் த்ரிஷாவுடன் விஜய் சேதுபதி நடிக்கிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கிறார். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குகிறார். ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 3 கெட்-அப்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. த்ரிஷாவுடன் இணைந்து நடித்தது குறித்து விஜய் சேதுபதியுடன் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்து இருக்கும் விஜய் சேதுபதி, நடிப்பை அதிகமாக நேசிக்கிறார் த்ரிஷா. எந்த காட்சியாக இருந்தாலும் அதை உணர்ந்து நடிப்பவர். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்து விடுவார். ஒருநாள் கூட தாமதம் ஏற்பட்டது இல்லை. இந்த தொழில் பக்திதான் அவரை 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வைத்து இருக்கிறது’ எனத் தெரிவித்தார்.
