Tamil Cinema News | சினிமா செய்திகள்
டிரம்பைச் சந்திக்க டாய்லெட்டுடன் சிங்கப்பூர் வந்த கிம் ஜாங் உன் ஏன் தெரியுமா?

அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்குக் கிலி ஏற்படுத்திய நாடு வடகொரியா. உலக நாடுகள் மத்தியில் அமெரிக்காவைப் போல தானும் பெரியண்ணன்தான் என்ற மனப்பான்மையுடன் அந்நாடு மமதையாக இருந்துவந்தது. அதேபோல், அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு சர்வாதிகாரியைப் போல் வானளாவிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால், அருகிலுள்ள தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிடம் கூட கடுமையான பகைமையை அந்நாடு வளர்த்து வைத்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடகொரியா அணு ஆயுத சோதனை என்பது தினசரி செய்திதாள்களில் இடம்பெறும் செய்தியாக மாறிப்போயிருந்தது. உலக அளவில் அமைதிக்காக உழைத்து வரும் பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் இதை கவலையுடன் கவனித்து வந்தன. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தன.
இந்தநிலையில், வடகொரியா கடைசியாக அணு ஆயுத சோதனை நடத்தியபோது நடந்த எதிர்பாராத விபத்தில் அந்நாட்டின் மிக முக்கியமான அணு ஆயுத சோதனைக் கூடம் முற்றிலுமாகச் சிதைந்தது. இதனால், பெருத்த நஷ்டத்தைச் சந்தித்த வடகொரியா, அணு ஆயுதங்கள் தயாரிப்பில் இருந்து பின்வாங்க முடிவு செய்து இறங்கிவந்தது. அதன் முதல்படியாக பரமவைரியாகக் கருதப்பட்ட தென்கொரியாவின் அதிபரை, அந்நாட்டின் எல்லைக்கே சென்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்தித்துப் பேசினார்.
அந்த சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பையும் சந்திக்க ஆவலாக இருப்பதாகத் தனது விருப்பத்தை கிம் வெளியிட்டார். அதன்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த சந்திப்பு சிங்கப்பூரின் செண்டோசேத் தீவில் நடந்தேறி இருக்கிறது. நேருக்கு நேர் நடந்த இந்த அமைதிப் பேச்சுவார்த்தை சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் நீடித்திருக்கிறது. அணு ஆயுதங்களை முற்றாகக் கைவிட்ட நிலையில், வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவரை, வடகொரிய அதிபர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்தநிலையில், டிரம்ப் உடனான இந்த சந்திப்பின் போது வடகொரியாவிலிருந்து பிரத்யேகக் கழிவறையைத் தன்னுடனேயே எடுத்து வந்திருக்கிறார் அதிபர் கிம் ஜாங் உன். தனது கழிவுகளைச் சேகரித்து உடல்நிலை, டயட் போன்றவற்றை எதிரி நாடுகளின் உளவுத் துறைகள் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடாம். செல்லும் இடங்களுக்குக் கழிப்பறையை கிம் கொண்டு செல்வது இது முதல்முறையல்ல என்கிறார்கள். சமீபத்தில் தென்கொரிய அதிபருடனான சந்திப்பின் போதும், கழிப்பறையுடனேயே அவர் பயணித்திருக்கிறார். அதேபோல், அந்த சந்திப்பின் போது தனக்கான பென்சில், பேனா உள்ளிட்டவைகளையும் கிம் எடுத்துச் சென்றிருக்கிறார். பேனா, பென்சில் போன்றவைகள் மூலம் தன்னுடைய கைரேகையை வேறு யாரும் பதிவு செய்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அதற்குக் காரணம்.. நீங்க கலக்குங்க ப்ரோ.
