முன்னணி நடிகர்களின் படங்களை நம்பி கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்த தயாரிப்பாளர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாகி உள்ளது.
மற்ற தொழில்களை விட சினிமாவில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான். ஒவ்வொரு நடிகரின் புகழுக்கேற்ப அவர்களது படங்களில் வசூலுக்கேற்ப அவர்களது மார்க்கெட் நிர்ணயிக்கப்படும்.
மேலும் அவர்களின் அடுத்தடுத்த படங்கள் எவ்வளவு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதை அவர்களது முந்தைய படங்களின் வெற்றிதான் தீர்மானிக்கும். அப்படி சமீபகாலமாக டாப் கியரில் வெற்றிப் படங்களை அதுவும் மிகப்பெரிய வசூலுடன் கொடுத்து வருபவர்தான் பிரபாஸ்.
ஆயிரம் கோடி வசூல்களையெல்லாம் அசால்டாக செய்து வருகிறார். இதனால் பிரபாஸ் படங்கள் தொடர்ந்து 300, 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. அப்படியே அவர் அடுத்ததாக நடிக்கும் ஆதிபுருஷ் மற்றும் ராதே ஷ்யாம் போன்ற படங்கள் மட்டுமே கிட்டத்தட்ட 700 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

அதனைத்தொடர்ந்து ராஜமவுலி 300 கோடி பட்ஜெட்டில் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) எனும் படத்தை உருவாக்கி வருகிறார். ஆனால் இந்த மூன்று படங்களுமே பாதி கிணறு தாண்டி மீதி கிணறு தாண்டாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
இதனால் அந்த படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கோடிக்கு மேல் பணம் ஒரே இடத்தில் முடங்கி கிடப்பதை நினைத்து மிகவும் வருத்தத்தில் உள்ளார்களாம். பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தலாம் என தயாரிப்பாளர்கள் கேட்டாலும் நடிகர்கள் வர மறுப்பதால் வேறு வழியில்லாமல் தேவுடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதே போல் தமிழில் விஜய்யின் தளபதி 65, அஜித்தின் வலிமை, சூர்யாவின் சூர்யா 40, விக்ரமின் கோப்ரா போன்ற படங்களும் ஆரம்பிக்கப்பட்டு முடிவை எட்டாமல் இருக்கின்றன. இந்த படங்களில் மட்டும் கிட்டதட்ட 500 முதல் 600 கோடி முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.