சமீபகாலமாக படம் வெற்றி பெறுகிறதோ இல்லையோ அனிருத் இசையமைக்கும் பாடல்கள் அனைத்துமே தொடர்ந்து இளம் ரசிகர்கள் மத்தியில் துள்ளாட்டம் போட வைக்கிறது. அந்த அளவுக்கு இளைஞர்களை அதிக அளவில் கவர்ந்து வைத்துள்ளார் அனிருத்.
அனிருத் இசையமைப்பில் அவரது கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற திரைப்படம் என்றால் அது தளபதி விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த கத்தி திரைப்படம் தான். இளம் இசையமைப்பாளரை நம்பி அவ்வளவு பெரிய படத்தை கொடுத்தனர்.
அவரும் அந்த படத்திற்கு நல்ல இசையை வழங்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசை அமைப்பாளராக மாறினார். தற்போது முன்னணி இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் முதல் சாய்ஸாக இருப்பது அனிருத் தான்.
தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் அனிருத் அவ்வப்போது ஒரு சில படங்கள் இசையமைத்து வருகிறார். அப்படி தெலுங்கில் கொஞ்சம் பிரபலமான இசையமைப்பாளராகவே உள்ளார். ஏற்கனவே தெலுங்கில் அஞ்சாதவாசி, கேங் லீடர், ஜெர்சி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக தெலுங்கு படமொன்றில் இசையமைக்க உள்ளாராம் அனிருத். ஆனால் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் தான் வேண்டும் என அடம் பிடிப்பது நடிகர் ஜூனியர் என்டிஆர் தான்.
இந்தியா முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு முன்னணி நடிகரே அனிருத் தான் வேண்டும் என அடம் பிடிப்பது அனைவருக்கும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளதாம். அனிருத் கைவசம் தற்போது தளபதி 65, டாக்டர், டான், இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற பல படங்கள் உள்ளன.