Tn Youth Party Statement

ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள் துவங்கிய தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில், ஆர்.கே.நகர் தொகுதியில் காமேஸ்வரன் வேட்புமனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக அந்த கட்சியின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காலம் காலமாக மக்களிடம் வாக்குகள் மட்டுமே சேகரிக்க தேர்தல் களம் இறங்கும் திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து மக்கள் விடுபடவேண்டும்.

லஞ்ச லாவண்யங்கள், குடும்ப அரசியல், இமாலய கொள்ளைகள், மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் விரோத செயல்கள், வணிக அரசியல் மட்டுமே இங்கு சர்வசாதாரணமாக அரங்கேறுகிறது.

மக்களை எப்பேதுமே பிரச்சனைகளில் இருக்க வைத்து விட்டு, லாபம் மற்றும் பதவி ஆதாயங்களை சேகரித்து கொள்கின்றனர்.

மக்களுக்கு எள்ளளவும் விருப்பமில்லா பல நிகழ்வுகள் நடந்தேறி, இன்று தேர்தல் களமிறங்கும் பெரும் கட்சிகள் பிளவுண்டு நிற்கின்றனர். அவர்களை நிராகரித்து நாம் தான் புதிய சகாப்தத்தை படைக்க வேண்டும்.

போராட்டம் மட்டுமே நிரந்தர தீர்வளிக்காது, மக்களில்லாத ஜனநாயகம் எப்படி வெல்லமுடியும். ஜனநாயகத்தில் நாம் அனைவரும் மன்னர்கள். நமது உரிமைகளை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே முடியும்.

முதன் முறையாக எந்த அரசியல் கட்சியும் கடைபிடிக்காத ஒரு சில விதிமுறைகளை நாங்கள் கடைபிடித்து மாநிலத்திற்கு மட்டுமல்லாது நாட்டிற்கே ஒரு எடுத்துக்காட்டாக இருப்போமென்று உறுதியளிக்கிறோம்.

ஆர்.கே.நகரில் தண்ணீர் பிரச்சனை மிக மோசமாகவுள்ளது. குடிநீருடன் கச்சாஎண்ணை கலந்து வருகிறது. மின்சார வசதி சீராக இல்லை அறிவிக்கபடாத மின்வெட்டுகள் ஏற்படுகிறது.

சாலைகள் சீராக இல்லாததால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சுற்றுசூழல் மாசு ஏற்பட்டுள்ளது. போன்ற குறைகளை தொகுதி மக்கள் எங்களிடம் முன் வைத்தனர்.

24ம் தேதி எங்கள் கட்சி வேட்பாளர் படிவம் ஒப்புதல் அளிக்கப்பட்ட பின் எங்கள் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்து செல்வோம், என்று குறிபிட்டுள்ளனர்.