Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி முன்ன மாதிரி இல்ல, விஜய், அஜித்துக்கு எதை பற்றியும் கவலை இல்லை.. வெளுத்து வாங்கிய திருப்பூர் சுப்பிரமணியன்
தற்போது தமிழக தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவராக இருக்கும் சுப்பிரமணியன் முன்னணி நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் ஒரு படம் வெளியாகி நூறு நாட்களுக்கு பிறகுதான் இணையதளங்களில் வெளியிட வேண்டும் என்ற முடிவை எடுத்துள்ளனர். அதனைப் பற்றி சுப்பிரமணியன் முன்னணி நடிகர்களை தாக்கி பேசியுள்ளது அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னணி நடிகர்களின் சம்பளம் உயர்ந்ததுதான் இந்த பிரச்சனைக்கு காரணம், 50 கோடி பட்ஜெட் உள்ள படத்தில் 40 கோடி சம்பளம் கொடுத்தால் தயாரிப்பாளரின் நிலைமை என்ன என்பதையும் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 50 நாட்களுக்கு மேல் நடந்த தியேட்டர் ஸ்ட்ரைக் பற்றி எந்த முன்னணி நடிகரும் கவலைப்படவில்லை. தற்போது வரை கூட அதைப்பற்றி யாரிடமும் விசாரிக்கவில்லை என்பதுதான் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார். தியேட்டர்கள் இல்லாமல் இவர்களது படங்கள் எப்படி மக்களை சென்றடையும்.
அவ்வாறு அவர்களை மக்களிடம் கொண்டு செல்லும் தியேட்டர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும் கூறியுள்ளார். மேலும் ரஜினியிடம் ராகவேந்திரா படத்தின் போது இருந்த மனிதாபிமானம் தற்போது கொஞ்சம்கூட இல்லை எனவும், விஜய், அஜித் போன்றவர்களுக்கு மனசாட்சியே இல்லை எனவும் நேரடியாக விளாசியுள்ளார்.
கடைக்கோடி தியேட்டர் ஊழியர்கள் வரை யோசிக்க வேண்டியது முன்னணி நடிகர்களின் கடமை எனவும், ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் தியேட்டர் ஸ்ட்ரைக் நடந்து கொண்டிருக்கும்போது வெளிநாடு சென்று ஓய்வெடுத்ததெல்லாம் சரி இல்லை எனவும் பேசியுள்ளார்.
அதுதான் எங்களை வெச்சு பாப்கார்ன், பார்க்கிங் என மொத்தமாக வசூல் பண்ணிட்டிருக்கீங்களே, அப்பறம் என்ன என்று கிசுகிசுக்கிறது கோலிவுட் வட்டாரம்.
