தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகித்து வந்த எஸ்.தாணுவின் பதவிக்காலம் முடிந்து விட்டதை அடுத்து, அடுத்த தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலை நீதிபதி முன்னிலையில் நடத்த வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்ததை யடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி கேபி சிவசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இதுவரையில்லாத அளவுக்கு இந்த முறை தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. அந்தவகையில், கேயார், ஏ.எம்.ரத்னம், டி.ஆர்., குஷ்பு, ராதாகிருஷ்ணன், ரித்தீஷ், மன்சூரலிகான் என பலர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவர்கள் என்று தெரிகிறது. விரைவில் தலைவர் மற்றும் அனைத்து பதவிகளுக்குமான வேட்பு மனு தாக்கல் தொடங்கவிருக்கிறது.

இந்தநிலையில், சிலர் வாக்குகளை பிரிப்பதற்காக தலைவர் பதவிக்கு போட்டியிடுவதை தவிர்க்கும் நோக்கத்தில், இதுவரை தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு அதை ரூ. 1 லட்சமாக உயர்த்தி விட்டனர். இதன்காரணமாக டெபாசிட் போய்விட்டால் ஒரு லட்சம் போய்விடும் என்கிற நிலை உருவாகியுள்ளது. இதனால் மற்ற தேர்தல்களைப்போன்று இந்த முறை ஓட்டை பிரிக்கும் நோக்கத்தில் யாரும் போட்டியிட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.