ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசைக் கண்டித்தும், விவசாயிகளின் தொடர் மரணத்தை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினாவில் காலையிலேயே ஒன்றுதிரண்ட இளைஞர்கள் பேரணி, பின்னர் சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையை முற்றுகையிட்டது. மேலும் இதில் இயக்குநர் அமீர், நடிகர் மன்சூர் அலி கான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதில் பேசிய அமீர், முதன்முறையாக யார் தலைமையுமின்றி இளைஞர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர். இத்தகைய இளைஞர் சக்தியை மதித்து, ஜல்லிக்கட்டு மற்றும் விவசாயிகள் மரணம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்சூர் அலிகான் பேசுகையில், உழவர் திருநாளாம் பொங்கல் தினம் நெருங்கும் வேளையில், விவசாயிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். காமராஜர் முதல்வராக இருந்த போதே கடைசியாக தமிழகத்தில் அணை கட்டப்பட்டது என்று குறிப்பிட்ட மன்சூர், தற்போதைய அரசியல்வாதிகள் நீ்ச்சல் குளங்களையே கட்டி வருகின்றனர் என்றார். எனவே விவசாயிகள் உயிரிழப்பை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சென்னை நகரை குலுக்கிய இந்த வரலாற்று சிறப்பு மிக்க பேரணி ’பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலம் #wedojallikattu என்ற தலைப்பின்கீழ் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.