மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை நடக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை செல்ல உள்ளதாகவும் தெரிகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி அளிக்கும் வகையிலான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார். மகராஷ்ட்ராவில் இருந்து சென்னைக்கு நாளை அவர் வருவதாக இருந்த நிலையில், அவரது பயணத் திட்டம் ஒரு நாள் முன்னதாக இன்று திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலை ஆளுநர் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, அதற்கான அறிவிப்பு வெளியானால், அரசு சார்பில் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

இதற்கான முன்னேற்பாடுகளை அலங்காநல்லூரில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் நேற்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மதுரை செல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.