அண்ணனை தள்ளிவிட்டு தாலிகட்டிய தம்பிக்கு நேர்ந்த கதி! பெண் வீட்டார் செய்த அதிரடி!

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள செல்லரைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன்கள் ரஞ்சித், ராஜேஷ், வினோத்.

கடந்த 6 நாட்களுக்கு முன்பு ராஜேஷுக்கு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்த காளீஸ்வரி என்பவரை திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் ராஜேஷுக்கும், காளீஸ்வரிக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. அப்போது தாலிகட்டும் நேரத்தில் ராஜேஷை தள்ளிவிட்டு அவரது தம்பி வினோத் காளீஸ்வரியின் கழுத்தில் தாலிகட்டி விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இரு வீட்டாரும் வினோத்தை வெளுத்து வாங்கி விட்டனர். பின்னர் ஏன் இப்படி செய்தாய் என வினோத்திடம் விசாரித்தனர். அப்போது தான் அவர்களது காதல் விவகாரம் தெரியவந்தது.

பெண் பார்க்க சென்ற போது காளீஸ்வரியிடம் காதல் வயப்பட்டார் வினோத். அவரது காதல் வலையில் காளீஸ்வரி சிக்கி கொண்டார். ரகசியமாய் காதலை வளர்த்தனர். பிறகு, திட்டமிட்டு அண்ணனை தள்ளி விட்டு மணப்பெண் காளீஸ்வரிக்கு தாலி கட்டியது தெரியவந்தது.

இந்த திருமணத்தை, இரு வீட்டாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பெண் வீட்டார் வினோத்தை ‘மாப்பிள்ளையாக’ ஏற்க முடியாது என கூறி காளீஸ்வரியின் கழுத்தில் கட்டி தாலியை பிடுங்கி எறிந்துவிட்டு அழைத்து சென்றுவிட்டனர்.

இதற்கிடையே காளீஸ்வரிக்கு வேறு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். அப்போது வினோத்துடன் தான் சேர்ந்து வாழ்வேன் இல்லை தற்கொலை செய்து கொள்வேன் என காளீஸ்வரி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, வினோத்தை போன் மூலம் தொடர்பு கொண்டு விருதுநகர் வருமாறு பெண் வீட்டார் கூறியுள்ளனர். அதற்கு வினோத் நான் கட்டிய தாலியை வீசி எறிந்து விட்டு சென்றீர்கள். இப்போது ஏன் அழைக்கிறீர்கள் என கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

பெண் வீட்டார் எவ்வளவோ முயற்சித்தும் வினோத் பிடி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெண் வீட்டினர், திருப்பத்தூருக்கு காரில் வந்து வினோத்தை கடத்திச் கொண்டு விருதுநகருக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தடுக்க முயற்சி செய்துள்ளனர். அவர்களை மீறி வினோத் கடத்தி சென்றுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.